முதலமைச்சரை அவதூறாக பேசிய வழக்கு; முடித்து வைக்க டிஜிபிக்கு கடிதம் எழுதிய தலைமை வழக்குரைஞர்!

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.குமரகுரு வழக்கில் நீதிமன்றத்தின் பரிந்துரையின் அடிப்படையில் வழக்கினை முடித்து வைக்க அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகமது ஜின்னா தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவாலுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். 

அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.குமரகுரு 19.09.2023 அன்று நடந்த பொதுக்கூட்டத்தில்  தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மீது அவதூறாக பேசியதால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து குமரகுரு இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். 

இம்மனுவினை விசாரித்த நீதியரசர் பொதுவெளியில் அவதூறாக பேசிவிட்டு சமூக வலைதளத்தில் மன்னிப்பு கோருவது ஏற்க இயலாது எனவும் எனவே மனுதாரர் அதே இடத்தில் பொதுக் கூட்டம் நடத்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆணையிட்டார். இந்நிலையில் குமரகுரு 09.10. 2023 அன்று அதே இடத்தில் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தி மன்னிப்பு கோரினார்.

இதையடுத்து சென்னை உயர்நீதி மன்றம் குமரகுருவிற்கு முன்ஜாமீன் வழங்கியது. மேலும் இவ்வழக்கினை முடித்து வைக்க அரசுக்கு பரிந்துரையும் செய்தது. இதையடுத்து தமிழ்நாடு அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகமது ஜின்னா தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அக்கடிதத்தில், "நீதிமன்ற உத்தரவின்படி இதனை உடனடியாக பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு நீதி மன்றத்தின் பரிந்துரையை பரிசீலிக்கும் போது இனி வருங்காலங்களில் இதுபோன்று அவதூறு மற்றும் வெறுப்பு பரப்புரைகளை செய்து பின்பு மன்னிப்பு கோரி வழக்கிலிருந்து தப்பித்து விடுவார்களோ என்று  எண்ணத் தேவையில்லை. அவதூறு மற்றும் வெறுப்பு பரப்புரைகளால் சட்டம் ஒழங்கு, பொது அமைதி மற்றும் பொது ஒழுக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அமைந்தால் குற்றவாளிகள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க தயங்க வேண்டாம்" எனவும் கூறியுள்ளார். 

இதையும் படிக்க: லாட்டரி அதிபர், மருமகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!