பைக் திருடர்களை துரத்திச் சென்று பிடித்த காவலர்...! பொதுமக்கள் பாராட்டு..!

பைக் திருடர்களை துரத்திச் சென்று பிடித்த காவலர்...! பொதுமக்கள் பாராட்டு..!

கடலூர் மாவட்டத்தில் வடலூர் நகரின், பல்வேறு பகுதியில் தொடர்ந்து புல்லட் மற்றும் பல்சர் ஆகிய பைக்குகள் திருடப்பட்டு வந்துள்ளன. இந்நிலையில் பெரியாக்குறிச்சியை சேர்ந்த முத்துலிங்கம் என்பவரின் மகன் வேல்முருகன்(41). சேராக்குப்பத்தைச் சார்ந்த கண்ணன் என்பவரின் மகன் ராஜ்குமார்(26), வடலூரைச் சேர்ந்த ராஜுலூ என்பவரின் மகன் முருகன்(60) ஆகியோர் தனது இரு சக்கர வாகனங்களை காணவில்லை என்று வடலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து பல்வேறு புகார்களை பெற்ற வடலூர் போலீசார் விசாரணையில் இறங்கினர். 

இந்நிலையில், தங்களது வாகனத்தை பறிகொடுத்தவர்கள் தனது வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் டிவிட்டர் என சமூக வலைத்தளங்களில் இருசக்கர வாகனத்தின் படங்களை பதிவிட்டு வாகனங்களை பார்த்தால் தகவல் தருமாறு உதவி கோரியிருந்தனர். இதனைத் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடுப் போன இடத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அந்த ஆய்வில் இருசக்கர வாகனங்களை திருடும் கும்பல் அடையாளம் காணப்பட்டது. அந்த சிசிடிவி கேமரா ஆய்வு மற்றும் சமூக வலைத்தளங்களின் அடிப்படையிலும் குற்றவாளிகளை தேடி ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது எஸ்ஐ சங்கர் தலைமையில் ஆய்வு மேற்கொண்ட போது, வடலூரில் உள்ள கடலூர் செல்லும் மெயின் ரோட்டின் அருகில் அய்யன் ஏரிக்கரையோரத்தில் சந்தேகபடும்படி மூன்று இளைஞர்கள் நின்று கொண்டிருந்தனர். அந்த இளைஞர்கள் போலீசாரை கண்டவுடன் பயந்து தப்பி ஓடினர். அந்த இளைஞர்களை எஸ் ஐ சங்கர் மற்றும் போலீசார் துரத்திச் சென்று  இரண்டு பேரை பிடித்தனர். அதில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். பிடித்த இருவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் நெய்வேலி பெரியாக்குறிச்சி புது நகரில் உள்ள மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சின்னசாமி என்பவரின் மகன் கலைவாணன்(21), சிதம்பரம் தாலுக்கா மணலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் சிரஞ்சீவி(20) கிளியனூர் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ்(22) என்பதும் தெரியவந்தது.

மேலும், குற்றவாளியான கலைவாணன் மீது ஏற்கனவே மந்தாரக்குப்பம், குறிஞ்சிப்பாடி, காவல் நிலையங்களில் இது போன்ற தொடர் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் தற்போது வடலூரிலும் தனது கைவரிசையை காட்டியுள்ளார்.  இதையடுத்து அவர்களிடமிருந்து நான்கு இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து இருவர் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் தப்பி ஓடிய குற்றவாளியான கிளியனூரை கிராமத்தை பிரகாஷை போலீசார் தேடி வருகின்றனர்.

கண்காணிப்பு கேமரா மற்றும் சமுக வலைத்தளத்தின் உதவியுடன் மூவரின் வாகனத்தை கண்டுபிடிக்க முயன்றபோது,  4 பேரின் இருசக்கரவாகனங்கள் கிடைத்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் வடலூர் எஸ்ஐ சங்கர் தலைமையிலான காவல்துறையினரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.