காட்டுக்குள் ரோடு போட்ட எஸ்டேட் முதலாளி...! கண்டுகொள்ளாத வனத்துறை அதிகாரிகள்...!!

காட்டுக்குள் ரோடு போட்ட எஸ்டேட் முதலாளி...! கண்டுகொள்ளாத வனத்துறை அதிகாரிகள்...!!

கோத்தகிரி அருகேயுள்ள மேடநாடு காப்புக்காட்டில் வனத்தில் சாலை அமைத்த விவகாரத்தில் வனச்சரகர் மற்றும் வனகாவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே மேடநாடு காப்பு காடு அமைந்துள்ளது. இந்த காப்பு காட்டை ஒட்டி சிவகுமார் என்பவருக்கு சொந்தமான 100 ஏக்கர் பரப்பளவில் எஸ்டேட் ஒன்று  உள்ளது. காப்பு காடு வழியாக எஸ்டேட்டுக்கு செல்வதற்கு  ஆங்கிலேயர் காலம் தொட்டே ஒத்தையடி பாதை இருந்துள்ளது.

இந்நிலையில் எந்த அனுமதியின்றி எஸ்டேட்டுக்கு செல்ல சாலையை விரிவாக்கும் பணி நடந்துள்ளது. இந்த எஸ்டேட்டின் உரிமையாளர் அங்கு 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு அனுமதியில்லாமல் சாலை அமைத்து வருவதாக மாவட்ட வனத்துறைக்கு புகார் வந்தது. இப்புகாரை அடுத்து வனத்துறையினர் கடந்த 13ம் தேதி சம்பவ இடத்திற்கு வந்து சாலை அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தினர். மேலும், அங்கு பணிக்கு பயன்படுத்தப்பட்ட பொக்லைன் மற்றும் ரோடு ரோலர் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதைத் தொடர்ந்து, மாவட்ட வன அலுவலர் கவுதம், குறிப்பிட்ட வனப் பகுதியை ஆய்வு செய்தார். இதில் எஸ்டேட் மேலாளர் பாலகிருஷ்ணன், டிரைவர்கள் உமர் பரூக் மற்றும் பங்கஜ் குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் எஸ்டேட் உரிமையாளர் சிவகுமாருக்கு விளக்கம் கேட்டு ‘நோட்டீஸ்’ வழங்கப்பட்டது.

இது குறித்து நீலகிரி மாவட்ட வன அலுவலகத்தில் பட்டா நிலத்தை சமன்படுத்துவதாக விண்ணப்பம் அளிக்கப்பட்டதாகவும், ஆனால் பட்டா நிலத்தை சமன்படுத்துவதாமல்,  வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் சாலை அமைப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இது குறித்து வருவாய் துறையினர் ஆய்வு செய்தனர். அதன் பேரில் எஸ்டேட்டின் உரிமையாளர் சிவகுமார் மீது கடந்த வாரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் இச்சம்பவம் நடைபெற்ற போது கோத்தகிரி வனச்சரகராக பணியில் இருந்த சிவா மற்றும் வன காவலர் தனபால் ஆகியோரை பணியிடமாற்றம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.