ஆட்டுக்கறிக் கடைக்கு இடைஞ்சல்... பக்கத்து வீட்டு பசுமாடுகளை வெட்டிக் கொன்ற குடும்பம்...

ஓமலூர் அருகே மூன்று  மாடுகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று நாட்களுக்கு பிறகு மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆட்டுக்கறிக் கடைக்கு இடைஞ்சல்... பக்கத்து வீட்டு பசுமாடுகளை வெட்டிக் கொன்ற குடும்பம்...

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பூசாரிப்பட்டி கிராமத்தில் வசிக்கும் தெய்வம் என்பவரின் மனைவி லட்சுமி நான்கு  மாடுகளை வளர்த்து வந்தார். இவரின் நான்கு மாடுகளையும் கடத்தி சென்று கடந்த 19-ம் தேதியன்று மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தனர். இதில், மூன்று பசு மாடுகள் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஒரு பசு மாட்டிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மாடுகளை கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று கிராம மக்கள் சேலம் மாவட்ட காவல் துறைக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர். இதனை தொடர்ந்து சேலம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார், மாடுகள் கொலை செய்யப்பட்ட இடத்தில் ஆய்வுகள் மேற்கொண்டனர்.

மூன்று நாட்களாக ஓமலூர் டி.எஸ்.பி சங்கீதா தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், பக்கத்து வீட்டை சேர்ந்த ராஜாவின் மனைவி மற்றும் மகன்கள் என நான்கு பேர் சேர்ந்து நான்கு சினை மாடுகளையும் கடத்தி சென்று, அங்குள்ள சுடுகாட்டில் வைத்து வெட்டி கொலை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து பக்கத்து வீட்டை சேர்ந்த ராஜாவின் மனைவி வளர்மதி, மகன்கள் வடிவேல், சக்திவேல் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் ராஜா வீடும், தெய்வத்தின் வீடும் அருகருகே உள்ளது. தெய்வத்தின் மனைவி லட்சுமி வளர்த்துவரும் நான்கு மாடுகளையும் வீட்டின் முன்பாகவே கட்டி வளர்த்து வந்துள்ளார். இந்த மாடுகள் ராஜா நடத்தி வரும் ஆட்டிறைச்சி கடைக்கு இடையூறாக இருந்து, வியாபாரம் பாதிக்கப்பட்டு வந்துள்ளது.

இதன் காரணமாக ராஜா குடும்பத்திற்கும், தெய்வம் குடும்பத்தாருக்கும் அடிக்கடி சண்டை சச்சரவுகள் இருந்துள்ளது. இந்த மாடுகளால் தான் இறைச்சி வியாபாரம் பாதிக்கப்படுகிறது என என்ணி, ராஜாவின் மனைவி வளர்மதி, மகன்கள் வடிவேல், சக்திவேல், இவர்களின் நண்பர் ஒருவர் என நான்கு பேர் சேர்ந்து நான்கு மாடுகளையும் அருகிலுள்ள சுடுகாட்டிற்கு ஒட்டிசென்று, ஆட்டை வெட்டும் கத்தியால் நான்கு மாடுகளையும் வெட்டியுள்ளனர் என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து மூன்று பேர் மீதும் மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர்.