மனைவிக்கு தூக்க மாத்திரை கொடுத்து பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டு தப்பி ஓடிய கணவன்...

திருப்பத்தூரில் மனைவிக்கு தூக்க மாத்திரை கொடுத்து பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டு தப்பி ஓடிய கணவனை போலீசார் தேடி வருகின்றனர். 

மனைவிக்கு தூக்க மாத்திரை கொடுத்து பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டு தப்பி ஓடிய கணவன்...

திருப்பத்தூர் மாவட்டம் புதுபூங்குளம் பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி, அதே பகுதியில் வாகன ஓட்டுநர் பயிற்சி நிலையத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் சத்திய மூர்த்தி, திவ்யா என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு தற்போது ஒரு பெண் குழந்தை உள்ளது. மனைவி திவ்யா தன் தாய் வீட்டில் தங்கி பி.எட் படித்து வந்த நிலையில், அடிக்கடி சத்திய மூர்த்தி, மனைவியை தன் வீட்டிற்கு அழைத்து வருவதும், மீண்டும், மாமியார் வீட்டிற்கு அனுப்பி வைப்பதும் வழக்கமான ஒன்றாக இருந்துள்ளது. இந்நிலையில் வழக்கம்போல்,  திவ்யாவை கோயிலுக்கு அழைத்து செல்வதாக கூறி அழைத்து வந்த சத்யமூர்த்தி, திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே, திவ்யாவை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். 

அலறல் சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள், எரிந்து கொண்டிருந்த நிலையில் இருந்த திவ்யாவை 108 ஆம்புலன்ஸ் மூலம்  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சத்தியமூர்த்தி தனது செல்போனில் பதிவு செய்து வெளியிட்ட வீடியோ வெளியாகியுள்ளது. அதில் தனக்கு சிறுநீரக பாதிப்பு தீவிரம் அடைந்துள்ளதால், நீண்ட காலம் வாழ முடியாது என்பதால், மனைவியை விட்டு பிரிந்து வாழ மனமில்லாமல், தூக்க மாத்திரை கொடுத்து மயக்க நிலையில் இருந்த பொழுது பெட்ரோல் ஊற்றி எரித்ததாக கூறியுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சத்தியமூர்த்தி மற்றும் அவரது மகள் குறித்த எந்த தகவலும் கிடைக்காததால் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.