
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம், சன்னராயனபட்னா தாலுக்கா ஹொலே நரசிபுரா பகுதியை சேர்ந்தவர்கள், சைத்ரா மற்றும் சிவக்குமார். இவர்களுக்கு கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கடந்த இரண்டு வருடங்களாக இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இதனால் தொடர்ந்து சண்டையிட்டு வந்த நிலையில், சிவக்குமார் சைத்ராவை தாக்கியதாக வழக்கு பதிவு செய்தனர். மேலும், இருவரும் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
நேற்று சனிக்கிழமை காலை சன்னராயனபட்னாவில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் இருவரும் வழக்கு விசாரணைக்கு ஆஜராகி இருந்த நிலையில், சுமார் ஒரு மணி நேரம் நீதிபதி இருவருக்கும் சேர்ந்து வாழ ஆலோசனை வழங்கியுள்ளார். இரண்டு குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சேர்ந்து வாழ, நீதிபதி அறிவுரை வழங்கிய நிலையில் அதை ஏற்றுக் கொண்ட சிவக்குமார் நீதிமன்ற அறையில் இருந்து வந்துள்ளார்.
பின்னர், சைத்ரா கழிப்பறை அருகே சென்றபோது தனது பையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சைத்ராவின் கழுத்தில் சிவகுமார் பலமாக வெட்டியுள்ளார். பின்பு சைத்ராவுடன் இருந்த தனது மகனையும் கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். அப்போது அருகில் இருந்த பொதுமக்கள், சிவக்குமாரை தாக்கி அங்கிருந்த காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் காவல்துறையினர் சிவகுமாரை கைது செய்து, சைத்ராவை ஆம்புலன்ஸ் வாகனத்தில் சிகிச்சைக்காக சன்னராயனபட்னா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின் ஹாசன் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கழுத்தில் இருந்த முக்கிய நரம்புகள் வெட்டுப்பட்டதால் சைத்ரா, வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நீதிமன்ற வளாகத்திலேயே கணவன் மனைவியை வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.