திண்ணையில் தூங்கியவர் தலைமீது கல்லைப்போட்டு கொலை... ஆம்பூர் அருகே அதிர்ச்சி...

ஆம்பூர் அருகே வீட்டின் திண்ணையில் உறங்கிக் கொண்டிருந்த  இளைஞர் மீது தலை மீது கல்லை போட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்ணையில் தூங்கியவர் தலைமீது கல்லைப்போட்டு கொலை... ஆம்பூர் அருகே அதிர்ச்சி...

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் ரசாக் பேட்டை பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (35) இவருக்கு கௌரி என்ற மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகள்  ஒரு ஆண் என மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் சிவகுமார் கட்டிட தொழில் செய்து வந்துள்ளார். மேலும் உள்ளூரில் பல்வேறு நிகழ்ச்சிகளின் போது மோதல் மற்றும் பல்வேறு  பிரச்சினையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

நாளடைவில் சிவகுமார் வேலைக்கு செல்லாமல் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு கைதாகி வழக்கு ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளதாக கூறப்படும் நிலையில் மனைவி மற்றும் குழந்தைகள் மூன்று ஆண்டுகளுக்கு முன் இவரை விட்டுப் பிரிந்து அருகில் உள்ள நாச்சார்குப்பம் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு பெரியங்குப்பம் பகுதியிலுள்ள தனது வீட்டின் முன்  திண்ணையில்  அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த போது நள்ளிரவில் மர்ம நபர்கள்  சிவகுமார் மீது தலையில் பாறாங்கல்லை போட்டு கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர். பின்னர் விடியற்காலையில் சிவகுமாரின் தாய் ராஜேஸ்வரி  கதவை திறந்து வெளியே வந்து பார்த்தபோது சிவகுமார் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பது தெரியவந்தது. மேலும் அதிர்ச்சி அடைந்த அவர்  அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின் பேரில் விரைந்து சென்ற ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி நேரில் சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் சிவக்குமார் ஏற்கனவே பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் முன்விரோத காரணமாக எதிரிகளால் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என இரு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூங்கிக்கொண்டிருந்தவர் மீது கல்லைப் போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.