கோவிலில் செருப்பை திருடும் டிப்டாப் ஆசாமி... சி.சி.டி.வி. காட்சியில் அம்பலம்...

பத்து நிமிடத்தில் பத்தாயிரம் ரூபாய் மதிப்பிலான   காலணிகளை திருடிச் சென்ற டிப்டாப் ஆசாமியின் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளது.

கோவிலில் செருப்பை திருடும் டிப்டாப் ஆசாமி... சி.சி.டி.வி. காட்சியில் அம்பலம்...

சென்னை மயிலாப்பூரில்  பிரசித்தி பெற்ற சாய்பாபா கோவில் உள்ளது, இங்கு சாதராண நாட்களிலேயே  அதிக கூட்டம் வரும், அதுவும் வியாழக்கிழமையன்று கூட்டம் இன்னும் அதிகரிக்கும். இதை பயன்படுத்தி டிப் டாப் ஆசாமி விலை உயர்ந்த செருப்பு திருடுவதை வாடிக்கையாக வைத்திருந்தது சி.சி.டி.வி காட்சிகள் மூலம் அம்பலமானது.

இன்று  சாய்பாபா கோவிலுக்கு சாமி கும்பிட வந்த சிலர் செருப்பை வெளியே விட்டு செல்லும் பகுதியில் நோட்டமிட்டு இருந்துள்ளனர், ஒருவரையொருவர் மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டும் பின்னர் எதையோ தேடுவதை போலவும் சுற்றி வந்துள்ளனர். பின்னர் என்ன நடந்தது என அவர்களுக்குள்ளேயே விசாரித்த போது ஒருவருக்கொருவர் தங்களின் விலை உயர்ந்த செருப்பை காணவில்லை என  பரஸ்பரமாக கூறிக்கொண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சற்று நேரத்தில் செருப்பை தொலைத்தவர்கள் எண்ணிக்கை 5ஆகா மாறியது, யாரோ திட்டமிட்டு செருப்பை திருடுவதை கண்டுபிடித்து, அனைவரும் கோயில் நிர்வாகத்திடம் முறையிட்டனர். இதையடுத்து கோவிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, ஜாகிங் சென்றுவிட்டு பாதிவழியில் கோயிலுக்கு வந்தவர் போல் டிப் டாப்பாக வரும் ஒரு ஆசாமி நேராக தனது பழைய செருப்பை கழற்றி விட்டு பவ்யமாக காலைக் கழுவிக் கொண்டு செருப்பு விடப்பட்ட இடத்திலேயே சிறிது நேரம் உடற்பயிற்சி செய்வது போல் நடிக்கிறார்.

சீப்பே இல்லாமல் வெறுங்கையால் தலையை வாரிக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கு உள்ள புதிய செருப்பை நோட்டமிட்டு  தனது சொந்த செருப்பு போல் திருட்டு செருப்பை மாட்டிக் கொண்டு அங்கிருந்து கிளம்பும் காட்சி கேமராவில் பதிவாகியுள்ளது.

காணாமல் போன ஒவ்வொரு செருப்பின் விலை 2000 ரூபாய்க்கு மேல் என செருப்பை தொலைத்தவர்கள் கூறியுள்ளனர், செருப்பை விட்டு சென்ற வெறும் 10 நிமிடத்திற்குள் செருப்புகள் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக கோயில் நிர்வாகத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என செருப்பை தொலைத்தவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.