பிரபல ரவுடியை என்கவுண்டர் செய்த போலீசார்...! பரபரப்பு சம்பவம்...!

தாம்பரம் அருகே காட்டில் பதுங்கி இருந்த பிரபல ரவுடி சச்சினை சுட்டு பிடித்து கைது செய்த போலீசார்

பிரபல ரவுடியை என்கவுண்டர் செய்த போலீசார்...! பரபரப்பு சம்பவம்...!

தாம்பரம் அடுத்த மணிமங்கலம், சோமங்கலம், குன்றத்தூர் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் சச்சின் (27). பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதிலும் குறிப்பாக கொலை முயற்சி, கொள்ளை, ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, மாமூல் வசூலித்தல் உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் சோமங்கலம் பகுதியில் உள்ள முக்கிய தொழிற்சாலைகளில் சச்சின் மாமூல் கேட்டு தொடர்ச்சியாக மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. தொழில்சாலைகளின் உரிமையாளர்கள் கொடுத்த புகாரின் பேரில் சோமங்கலம் போலீசார் சச்சினை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் சென்னை தாம்பரம் அடுத்த, தனியார் கல்லூரி அருகே உள்ள காட்டில் சச்சின் பதுங்கி இருப்பதாக பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சச்சினை பிடிக்க முற்பட்டனர். அப்போது சச்சினும் அவரது நண்பர் பரத் என்பவரும் போலீசாரை கத்தியால் வெட்ட முயன்றுள்ளனர். மேலும் கையில் வைத்திருந்த இரண்டு நாட்டு வெடிகுண்டை தூக்கி வீசி உள்ளனர். இதில் அதிர்ச்சி அடைந்த போலீசார் தற்காப்புக்காக துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டு உள்ளனர். இதில் சச்சின் என்ற ரவுடிக்கு தொடையில் குண்டு பாய்ந்தது. சச்சினின் நண்பர் பரத் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.

இந்த ரவுடிகள் தாக்கியதால் காவலர் பாஸ்கர் என்பவர் காயம் ஏற்பட்டு குரோம்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் குண்டு பாய்ந்த ரவுடி சச்சின் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். துப்பாக்கியால் சுட்டு ரவுடியை பிடித்த சம்பவம் சுற்றி உள்ள பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.