திமுக எம் பி மீதான சுடுகாடு முறைகேடு வழக்கு; உயர்நீதி மன்றத்தில் விசாரணை தொடக்கம்!

Published on
Updated on
1 min read

சுடுகாடுகளுக்கு கூரை அமைக்கும் திட்ட முறைகேடு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து முன்னாள் எம்.பி செல்வகணபதி உள்ளிட்டோர் தொடர்ந்த மேல்முறையீடு  வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் தொடங்கியுள்ளது.

கடந்த 1995-96 அதிமுக ஆட்சி காலத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சராக டி.எம்.செல்வகணபதி பதவி வகித்தார். அப்போது ஜவஹர் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் சுடுகாடுகளுக்கு கூரை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டதில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுடுகாட்டு கூரைகள் அமைப்பதில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் செல்வகணபதி உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. பின்னர்,  இந்த வழக்கை விசாரித்த சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2014-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. அதில், திமுக எம்.பி யாக பதவி வகித்த செல்வகணபதி, ஐஏஎஸ் அதிகாரிகளான ஜெ.டி.ஆச்சார்யலு, எம்.சத்தியமூர்த்தி, மாவட்ட திட்ட அதிகாரி எம்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தங்களது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, பாரதி என்பவருடன் கூட்டு சேர்ந்து சுடுகாட்டு கூரை அமைப்பதில் முறைகேடு செய்து அரசுக்கு 23 லட்சம் இழப்பு ஏற்படுத்தியதாக ஊழல் தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி 5 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. 

அதேபோல், கூட்டுச்சதியின் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து 5 பேரையும் விடுதலை செய்தது. கூட்டுசதியில் இருந்து 5 பேரும் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐ தரப்பிலும், 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து செல்வகணபதி உள்ளிட்டோர் தரப்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்த இந்த வழக்குகள் இன்று நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக  விசாரணைக்கு வந்தபோது, வழக்கு விசாரணையை அக்டோபர் 17 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com