கள்ளகாதலால் ஏற்பட்ட விபரீதம் !!!அடுத்தடுத்த உயிரிழப்பு...

கள்ளகாதலால் ஏற்பட்ட விபரீதம் !!!அடுத்தடுத்த உயிரிழப்பு...

கோவில் தெப்பக்குளத்தில் கிடந்த பெண் சடலத்தை அடையாளம் காணும் வகையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சாப்பாட்டில் விஷம் கலந்து கணவனை கள்ளக் காதலனுடன் சேர்ந்து கொலை செய்த மனைவி சிறைக்குச் சென்றுவிட்டு வெளியே வந்த நிலையில் குடும்பத்தார் சேர்த்துக்கொள்ளாததால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் தெப்பக்குளத்தில் கடந்த 27 ஆம் தேதி இரவு பெண் சடலம் மிதப்பதாக ஐஸ் ஹவுஸ் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் அளித்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து சடலமாகக் கிடந்த பெண் யார் என்பது குறித்தும் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்துகொண்டாரா? என்ற கோணத்தில் ஐஸ் ஹவுஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சடலமாகக் கிடந்த பெண் கடந்த சில நாட்களாக பார்த்தசாரதி கோயில் தெப்பக் குளத்தைச் சுற்றித் திரிந்தது தெரியவந்தது. ஆனால் அந்த பெண் யார் என்ற விவரம் தெரியாத நிலையில், போலீசார் தமிழகம் முழுவதும் காணாமல் போனவர்கள் மற்றும் குற்றவாளிகளின் அடையாளங்களை கண்டுபிடிக்கும் பிரத்தியேக இணையதளத்தை (CCTNS) பயன்படுத்தி இறந்த நபரின் புகைப்படத்தை பதிவிட்டு ஆய்வு செய்தனர். அப்போது சடலமாக கிடந்த பெண் கொலை வழக்கில் சிறைக்குச் சென்று திரும்பியவர் என்ற அதிர்ச்சித் தகவல் போலீசாருக்கு தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சடலமாக கிடந்த பெண் சூளைமேடு கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவரது மனைவி விஜயலட்சுமி (40) என்பதும், அவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனது கள்ளக் காதலனான மோகன் (எ) முண்டகண்ணு என்பவருடன் சேர்ந்து கணவன் செல்வத்தை சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த வழக்கில் சூளைமேடு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதும் தெரியவந்தது.

மேலும், விஜயலட்சுமிக்கு உடந்தையாக இருந்த மோகன் என்பவன் மீது 7 கொலை வழக்குகள் உட்பட பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், அவனது கள்ளக்காதலியான விஜய லட்சுமி தனக்கு 2 பெண் குழந்தைகள் இருப்பதையும் கருத்தில் கொள்ளாமல் அவனுடன் கூட்டு சேர்ந்து கணவனை கொலை செய்து சிறைக்குச் சென்று திரும்பிய நிலையில், உறவினர் வீட்டில் வாழ்ந்து வரும் குழந்தைகளும், குடும்பத்தாரும் விஜயலட்சுமியை வீட்டில் சேர்த்துக் கொள்ளாததும் விசாரணையில் தெரியவந்தது.

குடும்பத்தார் ஒதுக்கியதால் மனதளவில் பாதிக்கப்பட்ட விஜய லட்சுமி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் தெப்பக்குளத்தருகே தங்கி கிடைக்கும் வேலைகளைச் செய்து வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 27 ஆம் தேதி இரவு குளத்தின் முகப்பில் உள்ள சிறிய கதவு வழியாக உள்ளே நுழைந்த விஜய லட்சுமி குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. பிரேதப் பரிசோதனை முடிந்து விஜய லட்சுமியின் உடலை உறவினர்கள் வாங்க மறுத்து வந்த நிலையில், ஐஸ் ஹவுஸ் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடலை ஒப்படைத்து அனுப்பி வைத்துள்ளனர். கணவனை கொன்ற மனைவிக்கு பெற்ற பிள்ளைகளும், குடும்பத்தாரும் ஆதரவளிக்காத நிலையில், மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.