இணையத்தில் வைரலாகி வரும் இரு பெண் அரசு அதிகாரிகளின் வார்த்தை வாதம்!!!

இணையத்தில் வைரலாகி வரும் இரு பெண் அரசு அதிகாரிகளின் வார்த்தை வாதம்!!!

கர்நாடகாவில் அரசின் முக்கியப் பதவியில் இருக்கும் இரு பெண் அதிகாரிகள், ஒருவர் மீது ஒருவர் வைக்கும் குற்றச்சாட்டுகள், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  

கர்நாடக இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக ஐஏஎஸ் ரோகிணி சிந்தூரியும், கைவினைப் பொருள்கள் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக ஐபிஎஸ் அதிகாரி ரூபா என்பவரும் பணியாற்றி வருகின்றனர்.  இந்நிலையில், இருவரும் சமூகவலைதளங்களில் தொடர்ச்சியாக சண்டையிட்டு வருவது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, ரூபா அவரது இணையப் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படங்களின்படி, ஜனதாதள எம்எல்ஏ சாரா மகேஷும் ரோகிணியும் ஒன்றாக உணவகத்தில் இருக்கின்றனர்.  2021ம் ஆண்டில் இருவரும் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டில் புகார் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.  இதனைத் தொடர்ந்து, ரோகிணியின் மீது 20 குற்றச்சாட்டுகள் கொண்ட விரிவான ஃபேஸ்புக் பதிவை ரூபா பதிவிட்டுள்ளார்.  ஊழல், தனிப்பட்ட புகைப்படங்களை 3 ஆண் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பகிர்ந்தது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை ரூபா தொடர்ந்து பதிவிட்டுள்ளார்.

கொரோனா தொற்று காலத்தில் சாமராஜநகர் அரசு மருத்துவமனையில் 24 பேர் இறந்தபோது, ரோகிணி அவரது வீட்டில் உற்சாகமாக நீச்சல் குளத்தைக் கட்டியதாகவும் ரூபா கூறியுள்ளார்.  தொடர்ந்து, ரோகிணியின் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் அவர் வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரூபா, இப்புகைப்படங்களை தனிப்பட்ட விவகாரம் என எடுத்துக்கொள்ள முடியாது எனவும், அரசுப் பணியாளர்கள் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.  இதனை அரசு முழு கவனத்தில் கொண்டு, ரோகிணி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பதிலளித்துள்ள ரோகிணி, பொறுப்பான பதவிகளில் இருப்போர், மனநோயால் பாதிக்கப்படுவது ஆபத்தில் முடியும் என குறிப்பிட்டுள்ளார்.  தன்னைப் பற்றி தனிப்பட்ட முறையில் அவதூறுப் பிரசாரத்தை நடத்தும் ரூபாவை சட்டப்படி எதிர்கொள்வேன் எனவும் கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து விளக்கம் அளித்த ரூபா, நெறிமுறைப்படி அரசு அதிகாரிகள் ஊடகங்களுக்குச் செல்லக்கூடாது எனவும், தம் மீது ரோகிணி ஆதாரமற்ற பல குற்றச்சாட்டுகளை கூறியுள்ளதால், அது தொடர்பாக தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ரூபா பகிர்ந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், இணையத்திலும், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களிலும் வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க:   சிரியாவை விடாமல் துரத்தும் நிலநடுக்கம்... முடிவே இல்லையா?!!