சட்ட விரோதமாக கஞ்சா விற்ற இரு பெண்கள் கைது

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரு பெண்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சட்ட விரோதமாக கஞ்சா விற்ற இரு பெண்கள் கைது

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரு பெண்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதிக்குட்பட்ட கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள மூலக்கொத்தளம் சுடுகாட்டில் கஞ்சா விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் வண்ணாரப்பேட்டை சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் பிரவீன் டேனி  தலைமையிலான போலீசார் சுடுகாடு அமைந்துள்ள பகுதியை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் இரு பெண்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்ததை அடுத்து அவர்கள் இருவரையும் கையும் களவுமாகப் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் அவ்விருவரும் சென்னை பார்க் டவுன் பகுதியைச் சேர்ந்த பாலா மற்றும் அன்னை சத்யா நகர் பகுதியைச் சேர்ந்த தேனம்மாள் என்பது தெரியவந்தது. மேலும், இவர்கள் இருவர் மீதும் கோட்டை மற்றும் பூக்கடை காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. அதுமட்டுமல்லாமல் அவர்களிடம் இருந்த 1 1/2 கிலோ கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சட்ட விரோதமாக சுடுகாடு பகுதியில் இரண்டு பெண்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.