வசூல் தொகையுடன் தலைமறைவான தலைமைக் காவலர்... பணியிடை நீக்கம் செய்து உத்தரவு...

வாகன சோதனையின்போது வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை 10.46 லட்சத்துடன் தலைமறைவான சாணார்பட்டி தலைமைக் காவலரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார் மாவட்ட எஸ்.பி.

வசூல் தொகையுடன் தலைமறைவான தலைமைக் காவலர்... பணியிடை நீக்கம் செய்து உத்தரவு...

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் கர்ணன். சாணார்பட்டி காவல் நிலைய பகுதிகளில் வாகன சோதனையின்போது குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ.10.46 லட்சத்துடன் தலைமறைவான சாணார்பட்டி தலைமைக்  காவலரை பணியிடை நீக்கம்  செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.ஆர்.சீனிவாசன் உத்தரவிட்டுள்ளார்.

திண்டுக்கல் சாணார்பட்டி காவல் நிலையத்திற்குள்பட்ட பகுதிகளில், 9 சார்பு ஆய்வாளர்கள் தரப்பில் குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்கள் மீது 229 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த வழக்குகளில் ரூ.10.46 லட்சம் அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த பணம், சாணார்பட்டி காவல் நிலையத்தில் எழுத்தராக பணியாற்றி வரும் பெண் தலைமைக் காவலர் கீதாவிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையில், நத்தம் காவல் நிலையத்திற்கு அயல் பணிக்காக தலைமைக்காவலர் கீதா சென்றுள்ளார். அதனைத் தொடர்ந்து அபராதத் தொகையான ரூ.10.46 லட்சத்தை, முதல் நிலை காவலரான கர்ணன் என்பவரிடம் சார்பு ஆய்வாளர் பொன் குணசேகரன் முன்னிலையில் ஒப்படைத்து  சென்றுள்ளார். ஆனால், அந்த பணத்தை கையாடல் செய்த கர்ணன், கடந்த அக்.25ஆம் தேதி முதல் முன்னறிவிப்பு இல்லாமல் பணிக்கு வரவில்லை கூறப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் வினோத விசாரணை  மேற்கொண்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். அதனைத் தொடர்ந்து முதல் நிலை காவலரான கர்ணனை பணியிடை நீக்கம் செய்து திண்டுக்கல் மாவட்ட எஸ்பி ஸ்ரீனிவாசன் உத்தரவிட்டுள்ளார்.