
திருவண்ணாமலை | வந்தவாசி அடுத்த கீழ்குவளைவேடு கிராம பகுதியில் இயங்கி வரும் தனியார் பாலிடெக்னிக்கில் வயது முதிர்ந்த மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்று வரும் நிலையில் பல இடங்களில் இருந்து வெவ்வேறு வயதுடைய மாணவர்கள் வந்து தேர்வெழுதி வருகின்றனர்.
சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த 36 வயதான சீனிவாசன், தேர்வு எழுதுவதற்காக தனது நண்பர்கள் முத்துவேல்குமரன், கலைவாணன், கவியரசன், வேலாயுதம் ஆகியோருடன் கீழ்குவளைவேடு கிராமத்தில் வீடு எடுத்து தங்கி வந்தார்.
இந்த நிலையில் சீனிவாசன் தன் நண்பர்களுடன் சிவா என்பவரின் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றபோது சீனிவாசன் எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கினார்.
இதனையடுத்து தகவல் அறிந்த வந்தவாசி தீயணைப்பு துறை வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஒரு மணி நேரம் போராடி சீனிவாசனின் உடலை சடலமாக மீட்டு பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அப்போது, இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளது தெரியவந்துள்ளது. தேர்வெழுத வந்த குடும்பத் தலைவருக்கு நேர்ந்த இந்த கதியால் அப்பகுதியில் பெரும் சோகம் சுழன்றுள்ளது.