தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள உடையாம்புளி கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவர் சிவலார்குளம் கிராமத்தைச் சேர்ந்த நந்தகுமார் என்பவரிடம் 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.10 ஆயிரம் பணத்தை வட்டிக்கு வாங்கியதுடன் வாரந்தோறும் ரூ.300 வட்டிகட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த 2 ஆண்டுகளில் வட்டி மட்டுமே ரூ.25 ஆயிரத்திற்கு மேலாக கொடுத்ததாக கூறப்படுகிறது. கடந்த இரு வாரமாக தொழிலாளிக்கு வேலை இல்லை என்பதால் நந்தகுமார் வட்டி கேட்டு சென்ற போது அடுத்த வாரம் தருவதாக கூறினாராம். இப்படியே இரு வாரங்கள் பொறுத்த அந்த வட்டிக்காரர் நேற்று தொழிலாளியை ஆபாசமாக திட்டியதாகக் கூறப்படுகிறது.
அந்த தொழிலாளி ஆபாசமாக பேசினால் கந்து விட்டு கேட்டு மிரட்டுவதாக போலீசில் புகார் அளித்து விடுவேன் என தெரிவித்ததால் ஆத்திரமடைந்த நந்தகுமார் தொழிலாளியை சரமாரியாக தாக்கியதுடன் தனது உறவினர்களான பத்திரம் என்ற பத்திரகாளி, ஆறுமுகம் என்ற ஆனந்த் மற்றும் நந்தகுமாரின் சகோதரர் முஜீத்குமார் ஆகியோரும் தொழிலாளியை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதில் படுகாயம் அடைந்த தொழிலாளி கொடுத்த புகாரின்பேரில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து ஆலங்குளம் போலீசார் நந்தகுமார் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.