குழந்தை கடத்தல்காரர்களிடம் இருந்து ஏழு மாத ஆண் குழந்தை ஒன்றை, பணம் கொடுத்து விலைக்கு வாங்கியதற்காக, உத்திர பிரதேச பாஜக தலைவர் மற்றும் ஃபிரோசாபாத் மாநகராட்சி கார்ப்பரேட்டரான வினிதா அகர்வாலைக் கட்சியை விட்டு வெளியேற்றியதாக பாஜக தெரிவித்துள்ளது.
வார்டு எண் 51ஐச் சேர்ந்த கார்ப்பரேட்டர் வினிதா அகர்வால் மற்றும் அவரது கணவர் கிருஷ்ணா முராரி அகர்வால் ஆகியோர் தங்களுக்கு ஒரு பெண் குழந்தை இருந்தாலும், ஆண் குழந்தை வேண்டும் என்று 1.80 லட்சம் ரூபாய் கொடுத்து, கடத்தல் கும்பலிடம் இருந்து அக்குழந்தையை வாங்கியுள்ளனர் எனத் தகவல்கள் கூறுகின்றன.
அந்த கார்பரேட்டர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும் வகையில், பாஜகவின் ஃபிரோசாபாத் மஹாநகர் (மாநகரம்) பிரிவின் தலைவர் ராகேஷ் சங்க்வார், கடந்த செவ்வாய், (ஆகஸ்ட் 30), அவரை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், அவருக்கு அனுப்பிய கடிதத்தில், ஃபிரோசாபாத் மாநகர், அவர் மீது அளித்த புகாரின் பேரில் தான் நீக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்ததாகக் கூறினார்.
அவர்கள் காசு கொடுத்து வாங்கியதாகக் கூறப்படும் குழந்தை, கடந்த ஆகஸ்ட் 24 அன்று மதுரா சந்திப்பின் பிளாட்பாரத்தில் இருந்து திருடப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின், அரசு ரயில்வே காவல்துறையினரால் மீட்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, வினிதா அகர்வால், அவரது கணவர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே, நேற்று, பாஜக தலைவர் ஒருவர், தனது வீட்டில், பணிப்பெண்ணை மோசமாக கொடுமை படுத்தி, மீட்கப்பட்ட சம்பவம் குறித்த தகவல்கள் வெளியாகி, மக்களிடையே பதற்றம் கிளம்பியது தனியவே இல்லை. அதற்குள் இந்த சம்பவம் குறித்த தகவல்கள் பலரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தான் கூற வேண்டும்.