அரச்சலூர் அடுத்த நாகராஜபுரம் பகுதியை சேர்ந்த வடிவேல். இவர் திமுகவில் இருந்து விலகி பாஜகவின் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி முன்னிலையில் நேற்று பாஜகவில் இணைந்தார். மேலும் அவர் தனது பகுதியில் உள்ள சேதமடைந்த சாலையை சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதியை பார்வையிட அழைத்துச் சென்று காட்டியுள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு அப்பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் வடிவேலு படுத்து தூங்கிய போது, திமுக முன்னாள் கவுன்சிலரும் தற்போதைய கிளை செயலாளருமான தம்பி என்ற ஈஸ்வரமூர்த்தி அங்கு வந்து இடைவேளை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை வடிவேலு அவரது வீட்டில் இறந்துகிடந்தார். அதனை பார்த்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் காவல் துறையினருக்கு உடனடியாக தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரச்சலூர் காவல் நிலைய போலீசார் வடிவேலுவின் பிரேதத்தை கைப்பற்றி ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மொடக்குறிச்சி பாஜக சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி தலைமையில் பாஜகவினர், பாஜகவினருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக திமுகவினர் மீது குற்றம் சாட்டியும் வடிவேலு கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் ஈரோட்டில் இருந்து பழனி செல்லும் பிரதான சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுவதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தம்பி என்கின்ற ஈஸ்வரமூர்த்தி வடிவேலுவை நேற்று இரவு தாக்கியது உறுதி உறுதியானதை அடுத்து திமுகவைச் சேர்ந்த தம்பி என்கின்ற ஈஸ்வரமூர்த்தியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.