கோவை சின்னியம்பாளையம் சோதனைச்சாவடி அருகே கார் ஒன்றில் இருந்து பெண் சடலம் விழுவது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பீளமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை சின்னியம்பாளையம் சோதனைச்சாவடி அருகே சாலையில் விபத்தில் இறந்து போன நிலையில் 50 வயது மதிக்கதக்க பெண் சடலம் ஒன்றை போலீசார் மீட்டனர். இன்று அதிகாலை மீட்கப்பட்ட பெண்ணின் சடலத்தின் மீது அடுத்தடுத்து சில வாகனங்கள் ஏறியதால் உருக்குலைந்த நிலையில் இருந்த்தால் இறந்த பெண் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலை விபத்து என்று நினைத்த பீளமேடு போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, பெண் விழுந்து கிடந்த இடத்தில் இருந்து ஸ்கார்ப்பியோ கார் செல்லும் சிசிடிவி காட்சிகள் போலீசாருக்கு கிடைத்துள்ளது. கார் கடந்த போது பெண்ணின் சடலம் காரிலிருந்து கிழே விழுவது போல காட்சிகள் பதிவானதால், காரில் அந்த பெண்ணை அழைத்து வந்தவர்கள் சாலையில் அந்த தள்ளிவிட்டு சென்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணையை துவங்கி உள்ளனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் 2 தனிப்படைகள் அமைத்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்த பெண் யார் என்பது குறித்தும், ஸ்கார்ப்பியோ கார் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்டமாக விபத்து நடந்த இடத்திற்கு அடுத்து வரும் கணியூர் சுங்கச்சாவடியில் காரின் விபரங்களை சேகரித்துளள போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.