பல் பிடுங்கிய பல்வீர் சிங் வழக்கு; அடுத்த கட்ட விசாரணைக்கு அனுமதி கோரி சிபிசிஐடி கடிதம்!

Published on
Updated on
2 min read

அம்பாசமுத்திரத்தில் பல் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக காவல்துறை அதிகாரி பல்வீர் சிங் மீதான அடுத்த கட்ட வழக்கு விசாரணைக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு சிபிசிஐடி கடிதம் அனுப்பி உள்ளது.

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியில் விசாரணை கைதிகளின் பற்களை ஏஎஸ்பி பல்வீர் சிங் பிடுங்கிய விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஏஎஸ்பி பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஏஎஸ்பி பல்வீர்சிங் பற்களை பிடுங்கியதாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. விசாரணை அதிகாரியாக அமுதா ஐஏஎஸ் நியமிக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் 10 மற்றும் 17ஆம் தேதிகளில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

உயர்மட்ட குழு விசாரணை குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. மேலும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அத்துடன் பல்வீர் சிங் மீது மூன்று பிரிவுகளின் கீழ் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்கு தொடர்பாக மதுரை, சென்னை உயர்நீதிமன்ற கிளையில் பாதிக்கப்பட்ட அருண்குமார் என்பவர்  அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் மார்ச் 10ஆம் தேதி அன்று எடுக்கப்பட்ட கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை எனக்கு வழங்க வேண்டும். காவல்துறை அதிகாரி தாக்கியதில் பற்களை இழந்த எனக்கு எஸ்சி/எஸ்டி உட்பிரிவில் வழக்குப்பதிந்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக உயர்மட்ட குழு விசாரணை அதிகாரியான அமுதா மற்றும் திருநெல்வேலி உதவி ஆட்சியர் விசாரணை அறிக்கைகளை எனக்கு வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை அதிகாரியான சங்கர் தரப்பிலிருந்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் மீது விசாரணை இறுதி அறிக்கை தாக்கல் செய்யும் பணி விரைவு படுத்தப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் காவல்நிலையத்தில் சிசிடிவி காட்சி ஆதாரங்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டது. விசாரணை அதிகாரி அமுதா ஐஏஎஸ் ன் அறிக்கை தயாரிக்கும் பணி நிறைவடைய உள்ளது. குற்றப்பத்திரிக்கையும், அமுதா ஐஏஎஸ் அதிகாரியின் அறிக்கையும் நீதிமன்றத்தில் விரைவில் சமர்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

சி பி சி ஐ டி விசாரணை முடிக்கப்பட்டு தற்போது அடுத்த கட்ட வழக்கு விசாரணைக்காக தமிழக அரசின் அனுமதி கூறியிருப்பதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பல்வீர் சிங் தகுதிக்காண் காலத்தில் பணிபுரிந்து வருகிற காரணத்தினால் விசாரணைக்கான அனுமதியை தமிழக அரசு மட்டுமல்லாது,  யூ பி எஸ் சி அனுமதி பெறுவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுவதாக சி பி சி ஐ டி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com