"தேவைபட்டால் மட்டுமே குண்டர் சட்டத்தை பயன்படுத்த வேண்டும்" தலைமை வழக்குரைஞர் டிஜிபிக்கு கடிதம்!

"தேவைபட்டால் மட்டுமே குண்டர் சட்டத்தை பயன்படுத்த வேண்டும்" தலைமை வழக்குரைஞர் டிஜிபிக்கு கடிதம்!
பொது அமைதி பாதிக்கப்படும் சந்தர்ப்பங்களில் மட்டுமே குண்டர் சட்டத்தை பயன்படுத்த வேண்டுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தும்படி தமிழக டிஜிபி-க்கு தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகமது ஜின்னா கடிதம் எழுதியுள்ளார்
காவல் துறை அதிகாரிகளின் பரிந்துரையை பரிசீலித்து குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் தடுப்பு காவலுக்கு உட்படுத்த ஆணைகளை மாவட்ட ஆட்சியர்கள் பிறப்பிக்கின்றனர். அவ்வாறு, மாவட்ட ஆட்சியர்கள் பிறப்பிக்கும் குண்டர் சட்ட தடுப்பு காவல் தொடர்பான பெரும்பாலன உத்தரவுகள் சென்னை உயர் நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுவதுடன், தடுப்பு காவல் ஆணை தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற  அடிப்படையில் குற்றவாளிகளுக்கு உரிய நிவாரணம் அளிக்கவும் ஆணையிடுகின்றன.   
இவற்றை சுட்டிக்காட்டி டிஜிபி சைலேந்திரபாபுக்கு, அசன் முகமது ஜின்னா எழுதியுள்ள கடிதத்தில், கடுமையான குற்றங்களாகவும், பொது ஒழுங்கை முற்றிலும் மீறுவதாகவும் இருக்கும் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது மட்டுமே குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி உள்ளார்.
காவல்துறை அதிகாரிகள் பரிந்துரை செய்யும் நபர்கள் மீதுதான், மாவட்ட ஆட்சியர்களால் குண்டர் சட்டத்தில் அடைக்கும் உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக குறிபிட்டுள்ளா ஜின்னா, இவற்றில் பெரும்பாலானவற்றில் சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறி, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துவிடுவதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, குண்டர் சட்டத்தின்கீழ் தடுப்பு காவலில் உட்படுத்த பரிந்துரைக்கும் முன் சம்மந்தப்பட்ட காவல் துறையினர் பின்பற்ற வேண்டிய விரிவான வழிமுறைகள் குறித்து சுற்றறிக்கை ஒன்றை அனுப்புமாறு காவல் துறை தலைமை இயக்குநரை கேட்டு கொண்டுள்ளார்.
இதனால் மாவட்ட ஆட்சியர்கள் பிறப்பிக்கும் தடுப்பு காவல் ஆணைகள் உயர்நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யாது உறுதி செய்வதுடன் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு உயர்நீதி மன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் நிவாரண தொகை வழங்குவதும் தடுக்கப்படும் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.