ஏடிஎம் கார்டை கொடுத்து உதவி கேட்ட பெண்ணிடம், தந்திரமாக பண மோசடி செய்த திருடன்!

ஏடிஎம் கார்டை கொடுத்து உதவி கேட்ட பெண்ணிடம், தந்திரமாக பண மோசடி செய்த திருடன்!

நாமக்கல் அருகே, ஏ.டி.எம் கார்டை கொடுத்து பணம் எடுத்து தருமாறு உதவி கேட்ட பெண்ணிடம், வேறொரு கார்டை திருப்பிக் கொடுத்துவிட்டு, பின்னர் அப்பெண்ணின் கணக்கில் இருந்து லட்ச ரூபாய் பணத்தை திருடியுள்ளார் ஒரு நபர்.

நாமக்கல் அருகே உள்ள மரூபட்டியைச் சேர்ந்தவர் பெரியசாமி, இவருடைய மனைவி சரோஜா(51). இவர் கடந்த 15 ஆம் தேதி மாலை, மரூர்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுக்க சென்றுள்ளார். அங்கே ஏ.டி.எம் கார்டை சொருகி பணம் எடுக்க முயற்சி செய்துள்ளார், ஆனால் பணம் வரவில்லை. எனவே ஏ.டி.எம் மையத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்த நபர் ஒருவரிடம் ஏ.டி.எம் கார்டை கொடுத்து பணம் எடுத்து தருமாறு உதவி கேட்டுள்ளார்.

அந்த நபரும் ஏ.டி.எம் கார்டை எந்திரத்தில் போட்டு பார்த்துவிட்டு பணம் வரவில்லை எனக்கூறி மற்றொரு ஏ.டி. எம் கார்டை கொடுத்து விட்டு சென்று விட்டார். சரோஜா வீட்டிற்கு சென்று பார்த்த போது அது தனது ஏ.டி.எம் கார்டு இல்லை என தெரிந்துகொண்டு சந்தேகம் அடைந்த சரோஜா, கடந்த 17ஆம் தேதி வங்கிக்கு சென்று விசாரித்துள்ளார், அப்போது அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 22,500 திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இந்த மோசடி சம்பவம் குறித்து நாமக்கல் காவல்நிலையத்தில் புகார் செய்தார், அதன் பெயரில் ஆய்வாளர் சங்கரபாண்டியன் தலைமையில் ஆன போலீசார் வழக்கு பதிவு செய்து சரோஜாவிடம் ஏ.டி.எம் கார்டை மாற்றி கொடுத்துவிட்டு பணம் மோசடி செய்த மர்மநபரை வலை வீசி தேடி வந்தனர்.

போலீசாரின் விசாரணையில் மோசடி சம்பவத்தில் ஈடுபட்டது, நாமக்கல் கொசம்பட்டியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சிவ சண்முகம்(34) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க || மணிப்பூரில் கொடூரத்தின் உச்சக்கட்டம்... பெண்களை நிர்வாணமாக்கி நடக்கவிட்ட கும்பல்!! நடந்தது என்ன?