வரதட்சணை கொடுமை வழக்கில் ஓராண்டாக தேடப்பட்ட குற்றவாளி...! விமான நிலையத்தில் கைது...!

வரதட்சணை கொடுமை வழக்கில் ஓராண்டாக தேடப்பட்ட குற்றவாளி...! விமான நிலையத்தில் கைது...!

Published on

வரதட்சணை கொடுமை வழக்கில், கேரள போலீசாரால், ஓராண்டாக தேடப்பட்டு வந்த தலைமறைவு குற்றவாளி, துபாயில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த போது குடியுரிமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். 

கேரளா மாநிலம் வயநாடு பகுதியைச் சேர்ந்தவர் அஜித் ஜோசப் (28). இவர் மீது இவருடைய மனைவி கடந்த ஆண்டு மானந்தவாடி காவல் நிலையத்தில் வரதட்சனை கொடுமை புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வரதட்சனை கொடுமை பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, அஜித் ஜோசப்பை தேடி வந்தனர். ஆனால் அஜித் ஜோசப் வெளிநாட்டிற்கு தப்பி சென்று விட்டார். இந்த தகவல் கேரள போலீசாருக்கு தெரிய வந்தது. இதை அடுத்து அஜித் ஜோசப்பை வயநாடு போலீஸ் சூப்பிரண்டு, தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தார். அதோடு அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் எல்.ஓ.சி போட்டு வைக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் துபாயிலிருந்து, ஃப்ளை துபாய் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

அப்போது அதே விமானத்தில் கேரள போலீசாரால் தேடப்படும், தலைமறை குற்றவாளியான அஜித் ஜோசப்பும் வந்தார். அவருடைய பாஸ்போர்ட் ஆவணங்களை சென்னை விமான நிலைய குடி உரிமை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, இவர் வரதட்சணை கொடுமை வழக்கில் கேரள போலீசாரால் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்பது தெரிய வந்தது.

இதை அடுத்து கேரள போலீசுக்கும் இவரைப் பற்றி தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் கேரளாவில் இருந்து தனிப்படை போலீசார் சென்னை விரைந்தனர். கேரள மாநில தனிப்படை போலீசார் வரும் வரை, அஜித் ஜோசப்பை, சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com