வாடகை தராமல் வீட்டை ஆக்கிரமித்த திமுக வட்ட செயலாளர்!

வாடகை தராமல் வீட்டை ஆக்கிரமித்த திமுக வட்ட செயலாளர்!

மூத்த குடிமக்களின் வீட்டில் வாடகை தராமல் ஆக்கிரமித்துள்ள திமுக வட்ட செயலாளரை அப்புறப்படுத்த வேண்டுமென சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, தியாகராய நகரில் உள்ள அப்துல் அஜிஸ் தெருவில் உள்ள கிரிஜா என்பவரின் வீட்டில் திமுக-வை சேர்ந்த வட்டச் செயலாளர்  ராமலிங்கம் என்பவர் வாடகைக்கு இருந்துவந்துள்ளார். 2017 முதல் வாடைகை தராததால் வீட்டை காலி செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனாலும் ராமலிங்கம் வீட்டை காலி செய்யவில்லை என கிரிஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார்.

அவர் பிறப்பித்த உத்தரவில், 75 வயதான கணவருடன் வசிக்கும், 64 வயதான மனுதாரரின் வீட்டை ஆகஸ்டு 24ஆம் தேதிக்குள் காலி செய்வதுடன், வாடகை பாக்கியையும் கொடுத்து விடுவதாக ராமலிங்கம் அளித்த உறுதிமொழியை நிறைவேற்றவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே சென்னை காவல் ஆணையரை எதிர்மனுதாரராக தாமாக முன்வந்து சேர்த்த நீதிபதி, இந்த உத்தரவு கிடைத்த 48 மணி நேரத்துக்குள் காவல்துறையினரை அனுப்பி, கிரிஜாவின் வீட்டில் இருந்து ராமலிங்கத்தை வெளியேற்றி, அதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 4ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com