“என்னையா கேள்வி கேக்கற?”- காவலரை தாக்கிய போதை ஆசாமிகள் கைது...
சென்னை : எழும்பூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் பாலாஜி (30). நேற்றிரவு புதுப்பேட்டையில் உள்ள கொய்யா தோப்பு பகுதியில் சிலர் இடைவிடாமல் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது.
தகவலறிந்து, எழும்பூர் காவல் நிலைய காவலர்கள் கார்த்திகேயன், செல்வம் ஆகியோருடன் பாலாஜி சம்பவ இடத்திற்குச் சென்றார். அங்கு ஒருவர் பட்டாசு வெடித்துக் கொண்டே கூச்சலிட்டு, ப்பொது மக்களுக்கு இடையூறு விளைவித்ததைக் கண்டு விசாரித்ததில், அந்த நபர் புதுப்பேட்டையைச் சேர்ந்த பிரகாஷ் என்கிற ஜெயபிரகாஷ் என்பது தெரியவந்தது.
விசாரித்துக் கொண்டிருக்கும் போதே, அருகில் குடிபோதையில் நின்றுகொண்டிருந்த மேலும் இரு நபர்கள் போலீசாரிடம் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால், காவலர்கள் கார்த்திகேயன் மற்றும் செல்வம் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை தவிர்த்துவிட்டு ரகளையில் ஈடுபட்ட ஜெயபிரகாஷை ரோந்து வாகனத்தில் ஏற்றிக்கொண்டு புறப்பட, காவலர் பாலாஜி தனது இருசக்கர வாகனத்தில் ஏறி புறப்பட முற்பட்டார்.
ஆனால், அவரை போக விடாமல், வாக்குவாதம் செய்த ஒரண்டு போதை ஆசாமிகள், எதிர்பாராத நேரத்தில், காவலர் பாலாஜியை கையால் அடித்துத் தாக்கியுள்ளனர். அவர் கீழே விழுந்ததும், அவரை காலால் வயிற்றில் உதைத்து பயங்கர்மாக அடித்துத் தாக்கியதை கவனித்தவுடன், ரோந்து வாகனத்தை நிறுத்தி, காவலர் பாலாஜியை மீட்டனர் மற்ற காவலர்கள்.
மேலும் படிக்க | ஆறாவது மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்ட நபரால் பரபரப்பு...
அவரை தாக்கிய போதை ஆசாமிகள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதற்கிடையில் ரோந்து வாகனத்தில் இருந்து ஜெயபிரகாஷ் தப்பியோடினார். காயமடைந்த பாலாஜி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய நிலையில், காவலரை தாக்கிய இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் குடிபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு காவலரை தாக்கிய இருவர் திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞரான விக்னேஷ் (26) மற்றும் கடந்த மாதம் சட்டப் படிப்பை முடித்துள்ள முத்துகுமார் (26) என்பது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து அவ்விருவர் மீதும்
- ஆபாசமாக பேசுதல்,
- கொடுங்காயம் விளைவித்தல்,
- அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல்,
- கொலை மிரட்டல்,
- சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்துதல்,
- பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல்
ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தப்பியோடிய ஜெயபிரகாஷையும் போலீசார் தேடி வருகின்றனர். தட்டிக் கேட்ட காவலரையே தாக்கிய போதை ஆசாமிகளால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.