டெண்டர் முறைகேடு வழக்கு... இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை!!

டெண்டர் முறைகேடு வழக்கு... இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற உள்ளது. 

கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்த பொழுது, டெண்டர் வழங்குவதில் ரூ 4800 கோடி முறைகேடு செய்துள்ளாக திமுக எம்பி ஆர் எஸ் பாரதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, நெடுஞ்சாலை டெண்டர் அனைத்தையும், தனது உறவினர்களுக்கே வழங்கியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி, எனக் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், 6 வழிச் சாலை திட்டங்களிலும் முறைகேடு நடத்தியதாக குற்றச்சாட்டியிருந்தார்.

இந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தின் முதற்கட்ட விசாரணையின் பொழுது, முறைகேடு நடந்ததற்கான ஆதாரம்  எதுவும் இல்லை என லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை அளித்திருந்தது. இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து, எடப்பாடி பழனிச்சாமி உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், உயர்நீதி மன்றத்தின் உத்தரவை ரத்து செய்ததோடு, மீண்டும் இந்த வழக்கை விசாரிக்க வேண்டி உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி இந்த வழக்கை மீண்டும் விசாரித்த உயர்நீதி மன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கடந்த ஜூலை மாதம், வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவின் விசாரணை கடந்த வாரம், உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதிகள், இந்த வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்த நிலையில், மீண்டும் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com