கரூரில் அசுரன் பட பாணியில் அரங்கேறிய கொடூரம்!

கரூரில் அசுரன் பட பாணியில் அரங்கேறிய கொடூரம்!

கரூர்: குளித்தலையில் தென்னந்தோப்பு ஒன்றில் விவசாயி தீயில் எறிந்த நிலையில் சடலமாக மீட்பு.

கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த மாயனூர் அருகே ராசாக்கவுண்டனுர் பகுதியையே சேர்ந்தவர்கள் கருப்பண்ணன் (72) மற்றும் காத்தவராயன் (68). அண்ணன் தம்பியான இவர்களுக்குள், நிலம் சம்பந்தமாகவும், பொதுக்கிணற்றில் இருந்து நீர் பாய்ச்சுவது தொடர்பாகவும் அடிக்கடி பிரச்சனைகள் ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஒரு ஆண்டுக்கு முன்னரே வழக்கு பதியப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதாக தெரிகிறது. 

இந்நிலையில், இன்று காலை தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்று வருவதாக கூறிவிட்டு, கருப்பண்ணன் தோட்டத்திற்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், குடும்பத்தினர் தோட்டத்திற்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு, கருப்பண்ணன் கால் கட்டப்பட்டு தீயில் எரிந்து இறந்து சடலமாக கிடந்துள்ளார்.

சம்பவமறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த மாயனூர் காவல்துறையினர், விசாரணையை தொடங்கினர். இதுகுறித்து, கருப்பண்ணனின் குடும்பத்தினர், இச்செயலை செய்தது தம்பி காத்தவராயனாக தான் இருக்க கூடும் என்று குற்றம் சாட்டியுள்ளனர். 

கருப்பண்ணன் கால்கள் கட்டப்பட்டு,  எண்ணெய் ஊற்றி எரிக்கப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர், சம்பவ இடத்திற்கு மோப்பநாய் மற்றும் தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.  தடவியல் பரிசோதனைகள் முடிந்த பின், கருப்பண்ணனின் உடல் கரூர் அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. 

இச்சம்பவம் தொடர்பாக, மாயனூர் காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.