தாத்தாவின் மறைவை தாங்க முடியாத பேரன் தீக்குளித்து தற்கொலை

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தாத்தா உயிரிழந்த சோகத்தில் 17 வயது சிறுவன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  

தாத்தாவின் மறைவை தாங்க முடியாத பேரன் தீக்குளித்து தற்கொலை

காட்டுப்புத்தூர் அருகே உள்ள தவிட்டுபாளையம் பகுதியை சேர்ந்தவர் அசோகன். கூலி தொழிலாளி. இவரது மகன் குமரேசன் (17). இவர் தனது தாத்தாவான கருப்பையா (90) மீது அதிக அன்பு கொண்டிருந்துள்ளார். இந்த நிலையில், கடந்த மாதம் கருப்பையா முதுமை காரணமாக உயிரிழந்தார். இதனால் பேரன் குமரேசன் மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த சிறுவன் குமரேசன் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு, கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று மதியம் குமரேசன் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து, தந்தை அசோகன் அளித்த புகாரின் பேரில் காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாத்தா இறந்த வேதனையில் சிறுவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.