பெங்களூரில், வீட்டிற்குள் சகல வசதிகளுடன், கஞ்சா செடி வளர்த்த 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டம் குருபுரா பகுதியில் சந்தேகத்திற்கிடமாக 2 இளைஞர்கள் சுற்றித் திரிந்து வந்தனர். அவர்களை பதுங்கியிருந்து பிடித்த போலீசார், சுமார் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். போலீசில் சிக்கிய 2 இளைஞர்களும், சிவமோகாவில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் 4-ம் ஆண்டு பயின்று வரும் மாணவர்கள் என தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மாணவர்கள் தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்தபோதுதான் மிரண்டு போயினர் போலீசார்.
சிவமோகா பகுதியில் தனியாக வீட்டை வாடகைக்கு எடுத்த 3 மாணவர்கள், ஒரு அறையை தனியாக ஒதுக்கினர். அதில் ஒரு கூடாரம் அமைத்து, செயற்கையாக சூரிய வெளிச்சம் கொண்டு வரும் வகையில் சோடியம் விளக்கு வைத்து, மற்றும் செயற்கைக் காற்றுக்காக 6 மின்விசிறிகளை வைத்துள்ளனர்.
கடந்த நான்கு மாதங்களாக வீட்டிலேயே வளர்க்கப்பட்ட இந்த கஞ்சாச் செடியை பறித்து உலர வைத்து விற்பனைக்கும் கொண்டு சென்றுள்ளனர். மருத்துவத்துறை மாணவர்களாக இருந்தபோதும், போதைக்கு அடிமையான இளைஞர்கள், கஞ்சா தயாரிப்பது குறித்து ஆன்லைனில் பயின்று இவற்றை மேற்கொண்டதாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட மாணவர்களிடம் இருந்து 227 கிராம் உலர வைக்கப்பட்ட கஞ்சா, ஒன்றரை கிலோ எடை கொண்ட கஞ்சா செடி, கஞ்சா விதைகள் மற்றும் 19 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்த போலீசார் மருத்துவ மாணவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.