குழந்தை திருமணத்திற்கு மறுத்த மகள்... தாய் செய்த கொடூரம்!

Published on
Updated on
1 min read

மாப்பிள்ளை பிடிக்கவில்லை எனக் கூறியதால், பெற்ற தாயே, 17 வயது மகளை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். 

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் கொட்டங்கா பகுதியில் வசித்து வந்தவர் கோமளா. 17 வயது சிறுமியான இவருக்கு, அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்க்க முடிவெடுத்தனர். 11-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் தனக்கு இவ்வளவு அவசரமாக திருமணம் எதற்கு ? என கோமளா கேட்க, பெற்றோர் தரப்பில் கடுமையாக திட்டி, சரமாரியாக அடித்துள்ளனர். 

இருந்தாலும், திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை என பலமுறை கூறியிருக்கிறார் சிறுமி கோமளா. இந்நிலையில், கடந்த 8-ம் தேதியன்று கோமளாவை பெண் பார்ப்பதற்கு மாப்பிள்ளை வீட்டார் சென்றுள்ளனர். 

அப்போது தனக்கு திருமணத்தில் உடன்பாடில்லை என சிறுமி தெரிவித்ததைத் தொடர்ந்து, பிரச்னை பூதாகரமாக வெடித்தது. தான் பார்த்து வைத்த மாப்பிள்ளை வேண்டாம் எனக் கூறி விட்டு வேறொருவருடன் ஓடுவதற்கு காத்திருக்கிறாயா? என வாய்க்கு வந்தபடி திட்டிய சிறுமியின் தாய், தூக்கி போட்டு மிதித்துள்ளார். 

மேலும், வீட்டின் சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து, பெற்ற தாயே மகளின் வயிற்றில் சரமாரியாக குத்தினார். ரத்த வெள்ளத்தில் விழுந்த கோமளா, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். 

சம்பவம் குறித்து தகவல் அறிந்த கர்லடினே போலீசார், நேரில் சென்று கோமளாவின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, சிறுமியின் தாயை கைது செய்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com