தமிழ்நாடு முழுவதும் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடைபெற்று வரும் நிலையில் கோவை மாநகராட்சி திமுக கவுன்சிலர் வீட்டில் நடைபெற்ற சோதனை நிறைவு பெற்றது.
கோவை மாவட்டம் உக்கடத்தின் கோட்டைமேடு பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி கார் வெடித்து சிதறியது. இது தொடர்பான வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வரும் நிலையில், இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததாகவும் கோவை அரபிக் கல்லூரியில் படித்த மாணவர்களுக்கு தடை செய்யப்பட்ட இயக்கங்கள் தொடர்பாக பயிற்சியளித்ததாகவும் கோவை, சென்னை, தென்காசி ஆகிய இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் ஜி எம் நகரில் அபுதாஹீர் என்பவர் வீடு, குனியமுத்தூரில் சுஹைல் என்பவர் வீடு கரும்புக்கடையில் மன்சூர் என்பவர் வீடு , திமுக இளைஞரணியில் உள்ள தமிம் அன்சாரி என்பவரது வீடு ஆகிய இடங்களில் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு மணிகண்டபுரம் பகுதியில் வசித்து வரும் சாலை மஸ்தான் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. இதனிடையே, கோவை மாநகராட்சி 82-வது வார்டு திமுக கவுன்சிலர் முபசீரா இல்லத்தில் நடைபெற்ற சோதனை நிறைவு பெற்றது. மூன்று மணி நேர சோதனை முடிந்து வெளியேறிய அதிகாரிகள் கைகளில் பையுடன் சென்றனர்.
இதேபோல், சென்னை கிழக்கு கடற்கரை சாலை வெட்டுவாங்கேனியில் உள்ள சையது முகமது புகாரி என்பவர் வீட்டிலும், அயனாவரம் மயிலப்பன் தெருவில் உள்ள முகமது ஜக்கிரியா என்பவர் வீட்டிலும் திருவிக நகர் காமராஜர் தெருவில் முஜிபுர் ரகுமான் என்பவர் வீட்டிலும் அதிகாலை முதல் சோதனை நடைபெறுகிறது.
இதேபோல தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் முகமது இத்ரீஸ் என்பவர் வீட்டில் நான்கு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சோதனை நிறைவு பெற்றது. லேப்டாப், பெண்டிரைவ் மற்றும் சில ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 30 இடங்களில் சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் முக்கிய ஆலோசனை...!