போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட வடநாட்டு இளைஞர்கள் கைது!

போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட வடநாட்டு இளைஞர்கள் கைது!

செங்கல்பட்டு: பல்லாவரம் பகுதியில் ஹெராயின் போதை பொருள் விற்பனை செய்து வந்த ஒரு சிறுவன் உட்பட ஐந்து பேரை கைது செய்து சிறையில் அடைத்த காவல் துறையினர் 

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல், நாகல்கேணியில் தங்கி வேலை செய்யும்,வட மாநில தொழிலாளர்கள் ஹெராயின் போதை பொருள் விற்பனை செய்வதாக, சங்கர் நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சங்கர் நகர் போலீசார் பம்மல், நாகல் கேணியில் தங்கி,கட்டிட வேலை செய்து வந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த ஆஸ்மத் (24) என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவரிடம் ஒரு கிராம் ஹெராயின் இருந்தது தெரியவந்தது. மேலும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதில், சில தகவல்கள் பெறப்பட்டது. 

அதில், அதேபகுதியில் தங்கி கட்டட வேலை செய்து வந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த டோபி உசைன் (23), மனா (26), ரஸ்துல் இஸ்லாம் (29) மற்றும் 17 வயது சிறுவன் என நான்கு பேர் போதை பொருள் விற்பதாக தெரியவந்தது. மேலும், விசாரணை மேற்கொண்டதில், டோபி உசைன் மற்றும் சிறுவன் இருவரும், கொல்கத்தாவில் இருந்து மாதம் ஒரு முறை, 50 கிராம் ஹெராயின் போதை பொருளை 40ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி வந்து 1 லட்சம் ரூபாய் வரை விற்றுவந்தது தெரியவந்துள்ளது.

நான்கு  பேரையும் கைது செய்து விசாரித்ததில், அவர்களிடம் 48 கிராம் ஹெராயின் இருப்பதும் தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், சிறுவன் உட்பட 5 போரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.