அம்பத்தூரில் 3 வயது குழந்தையிடம் பாசமாக பழகி, கடத்திச் சென்ற இளைஞர்களை, நாக்பூர் ரெயில் நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
பீகாரைச் சேர்ந்த மிதிலேஷ் - மீரா தேவி தம்பதியினர், தங்களது இரு ஆண் குழந்தைகளுடன், அம்பத்தூரை அடுத்த பட்டரைவாக்கம், மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருகின்றனர். அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இவர்கள், கடந்த 18ஆம் தேதி வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பார்த்த போது, அவர்களது 2ஆவது மகன் ஷியாமை காணாததால் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதேசமயம், தம்பதியினர் தங்கியிருந்த வீட்டின் மேல்மாடியில் குடியிருந்த மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஷிவ்குமார் நோரியா மற்றும் மோனு கபரிதாஸ் என்ற இளைஞர்கள் இருவரும் மூட்டை, முடிச்சுகளுடன் மாயமானதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதனையடுத்து, அவர்கள் பணியாற்றிய தொழிற்சாலையில் இருந்து, செல்போன் எண் மற்றும் ஆதார் அடையாள அட்டையைப் பெற்ற போலீசார், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தகவல் சேகரித்தனர். அப்போது சென்னையில் இருந்து டெல்லி செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் அவர்கள் குழந்தையுடன் சென்றது உறுதியானது. இதனையடுத்து, நாக்பூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, நாக்பூர் ரயில் நிலையத்தில், இருவரையும் குழந்தையுடன் சேர்த்து சுற்றி வளைத்தனர். உடனடியாக விமானம் மூலம் நாக்பூர் சென்ற தனிப்படை போலீசார், கடத்தலில் ஈடுபட்ட 2 இளைஞர்களையும், குழந்தையையும் சென்னை அழைத்து வந்தனர்.
பின்னர் குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார், குற்றவாளிகள் இருவரையும் அம்பத்தூர் நீதிமன்றத்தி்ல் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். தின்பண்டங்கள், சாப்பாடு ஆகியவற்றை வாங்கிக் கொடுத்து, குழந்தைகளுடன் நன்கு பழகிய நிலையில், ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்து, குழந்தையைக் கடத்திச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.