உணவகத்தில் சத்துணவு முட்டைகள்; உணவின் தரத்தை ஆய்வு செய்ய சென்ற அதிகாரிகளுக்கு அதிர்ச்சி!

சின்னசேலத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வின்போது, அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு முட்டையை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சுகந்தன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கதிரவன் மற்றும் அன்பு பழனி, சண்முகம் ஆகியோர் இன்று சின்னசேலத்தில் உணவகங்களில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வந்த நிலையில் சின்னசேலம் சேலம் மெயின் ரோடு பகுதியில் உள்ள ஹார்ட் பீட் என்ற கடையில் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்ட போது அங்கு அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பள்ளி மாணவர்களுக்கு அரசு வழங்கும் சத்துணவு முட்டைகள் அங்கு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

பள்ளிகளில் மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும் சத்துணவு முட்டைகள் சுமார் 100 எண்ணிக்கையிலான  முத்திரை இடப்பட்ட முட்டைகள் இந்த கடையில் இருப்பதை கண்டுபிடித்த அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர். முட்டை வைத்திருந்த அந்த கடைக்கு ரூபாய் 5000 அபராதம் விதித்தனர். தொடர்ந்து பல்வேறு கடைகளில் அதிரடி ஆய்வுகளை மேற்கொண்டனர். இதில் உணவு தரமாக தயாரிக்கப்படாமல் இருந்த கடைகளுக்கு ரூபாய் 3000 முதல் 5000 வரை அபராதம் விதித்தனர்.

உணவின் தரத்தை ஆய்வு செய்யச்சென்ற இடத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு முட்டைகள் எப்படி வந்தன என்ற கேள்விகள் எழுந்துள்ளன. 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com