மக்களே உஷார்... ஏ டி எம் மையங்களில் புதிய மோசடி!!

மக்களே உஷார்... ஏ டி எம் மையங்களில் புதிய மோசடி!!

திருவாள்ளூர் மாவட்டம் திருத்தணியில் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க வருபவர்களிடம் நூதன முறையில் பண மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம்  திருத்தணியில் ஏ.டி.எம் மையங்களில்  முதியோருக்கு  உதவி செய்வது போல் நடித்து பணம் மோசடியில்  ஈடுபட்டு வந்த சம்பவங்கள்  சமீப காலமாக அதிகரித்து வந்தது. இந்நிலையில்   திருத்தணி  எஸ்.பி.ஐ வங்கி கிளை வளாகத்தில் உள்ள ஏ.டி.எம்.மையத்தில் வெகுநேரம்  முகக்கவசம் அணிந்துக்  கொண்டு வாலிபர் ஒருவர்  நின்றிந்தததை சி.சி.டி.வி காட்சியில் பார்த்த வங்கி கிளை மேலாளர்  சந்தேகமடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

போலீசார் வங்கிக்கு விரைந்து வந்து அங்கு நின்றுக்கொண்டிருந்த வாலிபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இதில், அவரிடம் 20க்கு மேற்ப்பட்ட போலியான  ஏ.டி.எம். கார்டுகள் வைத்திருந்ததும், ஏ.டி.எம் மையங்களில் பணம் எடுக்க வரும் முதியோருக்கு உதவி செய்வது போல் நடித்து அவர்களின் ஏ.டி.எம் கார்டு பின் நெம்பர் தெரிந்துக்கொண்டு திசை திருப்பி கார்டு மாற்றிக் கொடுத்து விட்டு அவர்கள் சென்ற பின் அவர்களது ஏ.டி.எம் கார்டிலிருந்து பணம் எடுத்து மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து முதியோரிடம் நூதன மோசடியில் ஈடுபட்ட ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தக்கோலம் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை (27) என்ற வாலிபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில்  ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தால், ஏ டி எம் மையத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் முதியோர்கள், மிகுந்த கவனத்துடன் செயல்படுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிக்க: ஒற்றை யானை நடமாட்டம்... வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை!