நெல்லையில் பெப்பர் ஸ்பிரே அடித்து 1.5 கோடி கொள்ளை!

நெல்லையில் பெப்பர் ஸ்பிரே அடித்து 1.5 கோடி கொள்ளை!

நெல்லையில் நகை வியாபாரியிடம் பெப்பர் ஸ்பிரே அடித்து ஒன்றரைக் கோடி ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நெல்லை டவுன் பகுதியில் தங்க நகை மொத்த விற்பனை மற்றும் தர பரிசோதனை கடை நடத்தி வரும் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த சுஷாந்த் என்பவர் தங்கம் வாங்குவதற்காக இன்று அதிகாலை தனது வீட்டில் இருந்து கார் மூலம் கேரள மாநிலம் சென்றுள்ளார். இது குறித்த தகவலை அறிந்த மர்ம நபர்கள் இரண்டு கார்களில் அவரை பின்தொடர்ந்து சென்று மூன்றடைப்பு ரயில்வே மேம்பாலம் அருகே காரை வழிமறித்து மிளகு ஸ்பிரே அடித்து கார் கண்ணாடிகளை உடைத்து பணத்தை திருட முயற்சித்துள்ளனர்.

அப்போது பின்னால் வந்த சொகுசு பேருந்து ஓட்டுநர் மற்றும் பயணிகள் அடிதடி சம்பவம் நடப்பதை கண்டு இறங்கி கூச்சலிடத் தொடங்கியதும் உஷாரான மர்ம நபர்கள் அவர் வந்த காரிலேயே அழைத்துக் கொண்டு நாங்குநேரி டோல்கேட் அருகே உள்ள நெடுங்குளம் பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு இருக்கும் காட்டுப் பகுதிக்கு செல்லும் ஒற்றையடி பாதையில் காரை நிறுத்தி காரில் இருந்த சுமார் ஒன்றரை கோடி பணத்தை எடுத்துக் கொண்டு தப்பியுள்ளனர்.

இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ள நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த நாங்குநேரி டிஎஸ்பி தலைமையில் ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மேலும் சிசிடிவி கேமராவில் பதிவான கார் பதிவு எண் உள்ளிட்டவைகள் கொண்டும் தீவிரமாக காரில் இருந்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சுசாந்துடன் காரில் இருந்த நபரிடமும் மூன்றடைப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் ஆய்வு மேற்கொண்டு உள்ளார். மேலும் சுஷாந்த் ஓட்டி வந்த காரில் தடய அறிவியல் துறை நிபுணர்கள் மற்றும் கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்து தடயங்களை சேகரித்து வருகின்றனர். நெல்லை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு மேற்கொண்டு குற்றவாளிகளைத் தீவிரமாக தேடி வருகின்றனர். 

இதையும் படிக்க:ஆசிரியர் தேர்வு வாரியம் உறங்குகிறதா? அன்புமணி கேள்வி!