சைதாப்பேட்டை பெட்ரோல் பங்க் விபத்து; உரிமையாளர் நீதிமன்றத்தில் சரண்!

சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் மேற்கூரை இடிந்து விழுந்த வழக்கில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் அசோக்குமார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

சென்னையில் கடந்த 29 ஆம் தேதி மாலை நகரின் பல்வேறு இடங்களில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்ப வந்தவர்கள், மழைக்கு ஒதுங்கியவர்கள் மற்றும் அங்கு வேலைபார்ப்போர் என 30 க்கும் மேற்பட்டோர் அந்த பெட்ரோல் பங்கில் நின்றிருந்தனர். 

பலத்த காற்று காரணமாக பெட்ரோல் பங்கில் உள்ள இரும்பு மேற்கூரை சரிந்து விழுந்தது. அதில் 20 க்கும் மேற்பட்டோர்  சரிந்து விழுந்த கூரையின் அடியில் சிக்கினர். அவர்களை மீட்க அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் போராடினர். எனினும் மேற்கூரை கணமாக இருந்ததால் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இடிபாடிகளில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டனர். இந்த திடீர் விபத்தால் பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வந்த கந்தசாமி என்பர் பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.

இதனையடுத்து சைதாப்பேட்டை போலீசார் பெட்ரோல் பங்கின் உரிமையாளர் அசோக் குமார், மற்றும் மேலாளர் வினோத் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலாளர் வினோத்தை மறுநாளே கைது செய்த போலீசார், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான அசோக்குமாரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று அசோக்குமார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவர் சார்பாக நீதிமன்ற ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. வழக்கு பிரிவு காவல்நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட வேண்டிய பிரிவு என்பதால் அசோக்குமார் நீதிமன்ற ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com