சிவகார்த்திகேயனை வைத்து படம் எடுக்க போவதாக கூறி பல கோடி மோசடி செய்த நகைக்கடை நிறுவனம்..!

சிவகார்த்திகேயனை வைத்து படம் எடுக்க போவதாக கூறி   பல கோடி மோசடி செய்த நகைக்கடை நிறுவனம்..!
Published on
Updated on
1 min read
அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் பல கோடி மோசடி செய்துவிட்டு தலைமறைவாக இருந்து வந்த ஏ.ஆர்.டி ஜுவல்லரி நிறுவனத்தின் உரிமையாளர்கள் இருவரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
 சென்னை நொளம்பூர் பாரதி சாலையில் ஏ.ஆர்.டி ஜூவல்லரி என்ற பெயரில் நகைக்கடை செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் ஆல்வின் மற்றும் ராபின். தங்க நகை சேமிப்பு, தங்க நகை கடன் மற்றும் 1 லட்சம் முதலீடு செய்தால் வாரம் 3 ஆயிரம் வீதம் 1 மாதத்திற்கு 12 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என கவர்ச்சிகரமான திட்டங்களை இந்நிறுவனம்  அறிவித்தது. இதனை நம்பிய ஆயிரக்கணக்கான பொதுமக்கள் லட்சங்களாக நிறுவனத்தில் முதலீடு செய்தனர். மேலும் சிவகார்த்திகேயனை வைத்து பிரமாண்டமான திரைப்படம் எடுக்கப்போவதாக கூறி பொதுமக்களை நம்பவைத்துள்ளனர்.  
மேலும் முதலீடு பணத்தில் ஏ.ஆர் மால் மற்றும்  பல மாவட்டங்களில் நகைக்கடையின் கிளைகள் என தொழிலை பெருக்கினர். சில நாட்கள் வட்டியை வாரி வீசி வந்த இந்நிறுவனம் பின்னர் வட்டி தராமல் பல ஆயிரம் கோடிகளை சுருட்டிக்கொண்டு தலைமறைவாகி விட்டனர். இந்த நிறுவனத்தில் ஏமாந்த பொதுமக்கள் பலரும் நகைக்கடை, ஏ.ஆர் மால் என  முற்றுகையிட்ட போது  அவர்களை குண்டர்களை வைத்து தாக்கியதால் வேறு வழியின்றி அனைவரும்  பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். 
பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஏ.ஆர்.டி  நிறுவனத்தின் உரிமையாளர்கள் ஆல்வின், ராபர்ட் மற்றும் தொடர்புடைய ஏஜெண்டுகள் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து நிறுவனத்தின் தொடர்புடைய  இடங்களில் தீவிர சோதனை நடத்தி ஏ.ஆர் மால் மற்றும் நகைக்கடைக்கு சீல் வைத்து சென்றனர். 
இவ்வழக்கில் முக்கிய நபர்களான ஆல்வின் மற்றும் ராபின் ஆகியோர் தொடர்ச்சியாக தலைமறைவாக இருந்து வந்ததால் அவர்களுக்கு எதிராக பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. மேலும் இவ்வழக்கில் ஏஜென்ட் பிரியா என்பவரை மட்டும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். 
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த முக்கிய நபர்களான ஏ.ஆர்.டி ஜுவல்லரி குழுமத்தின் உரிமையாளர்கள் ஆல்வின் மற்றும் ராபின் ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இவர்களை ஏ.ஆர் மால் மற்றும் ஏ ஆர் டி ஜூவல்லரி கடை ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
 மேலும் பொது மக்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த பணத்தை இவர்கள் எங்கே பதுக்கி வைத்துள்ளனர்? எனவும் சொத்துக்களாக ஏதும் குவித்துள்ளனரா அல்லது வெளிநாட்டில் ஏதும் சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளதா என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com