ஆயிரம் விளக்கு காவலர் குடியிருப்பில் தரமற்ற கட்டிடம்... சஸ்பெண்ட் செய்யப்பட்ட பொறியாளர்கள்...!!

ஆயிரம் விளக்கு காவலர் குடியிருப்பில் தரமற்ற கட்டிடம்... சஸ்பெண்ட் செய்யப்பட்ட பொறியாளர்கள்...!!

ஆயிரம் விளக்கு காவலர் குடியிருப்பில் சுவர் பூச்சு சரிந்து விழுந்த விவகாரத்தில், 6 கட்டுமான பொறியாளர்களை சஸ்பெண்ட் செய்து தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய தலைவர் ஏ.கே விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

ஒப்பந்தம்:

சென்னை ஆயிரம் விளக்கு ஆண்டர்சன் சாலையில் தமிழ்நாடு வீட்டுவசதி கழகத்தின் சார்பில்  புதிதாக காவலர் குடியிருப்பு ஒன்று கடந்த ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.  186.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1036 குடியிருப்புகளை கட்டுவதற்காக கடந்த 2015ம் ஆண்டு ஈரோட்டை சேர்ந்த ஆர்.சி.சி என்ற கட்டுமான நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு, 2021ஆம் ஆண்டு அந்நிறுவனம் 95% கட்டுமான பணிகளை முடித்தது.

காவலர் குடியிருப்பு:

அதன்பின்பு திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதும் மின்இணைப்பு, குடிநீர் இணைப்பு, வண்ணம் பூசல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது.  இதனையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் காவலர் குடியிருப்பை  திறந்து வைத்தார்.  இந்த குடியிருப்பில் ஏராளமான காவலர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 

வைரலான வீடியோ:

இந்நிலையில் அந்த காவலர் குடியிருப்பில் சுவர் பூச்சு பெயர்ந்து விழுவதாகவும், கைவைத்தால் உதிர்ந்து கொட்டுவது போன்ற வீடியோ ஒன்று  கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வைரலானது.  இதனையடுத்து தரமில்லாத குடியிருப்பை தான் முதல்வர் திறந்து வைத்ததாக யூடியூபர் சவுக்கு சங்கர் குற்றஞ்சாட்டினார். கடந்த அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட புளியந்தோப்பு கே.பி பார்க் அடுக்குமாடி குடியிருப்பு தரமில்லாமல் கட்டியதாக புகார் எழுந்த நிலையில், தற்போது ஆயிரம் விளக்கு கொச்சின் ஹவுஸ் காவலர் குடியிருப்பும் தரமில்லாமல் கட்டபட்டுள்ளதாக புகார் எழுந்தது. 

ஆய்வு:

இதையடுத்து தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் தலைவர் டிஜிபி ஏ.கே விஸ்வநாதன் தரமில்லாத காவலர் குடியிருப்பு கட்டப்படுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், கட்டுமான பணிகளை மேற்கொண்ட தனியார் கட்டுமான நிறுவனத்திடம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.  மேலும் கட்டிடத்தின் குறைபாடுகளை ஆய்வு செய்யவும் உத்தரவிட்டார்.

சஸ்பெண்ட்:

இந்த நிலையில் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சரிவர கட்டுமான பணியை கவனிக்க தவறியதாக நிர்வாக பொறியாளர்கள் ஜகன்நாதன், உதவி நிர்வாக பொறியாளர் ரமேஷ், உதவி பொறியாளர் கனகேஷ்வரன், ஜூனியர் பொறியாளர்கள் மாணிக்கம், மோகன் ராஜ், ஆறுமுகம் ஆகிய 6 பேரை சஸ்பெண்ட் செய்து தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய தலைவர் ஏ.கே விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com