ஸ்டார் ஹோட்டல் பார்ட்டி... சொகுசு காரில் இளம் பெண் அலறல்... காரை திறந்தால் 3 இளைஞர்கள்!! போலீஸ் ஷாக்

சென்னையில் இளம் பெண்ணை காரில் அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்ற மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ஸ்டார் ஹோட்டல் பார்ட்டி... சொகுசு காரில் இளம் பெண் அலறல்... காரை திறந்தால் 3 இளைஞர்கள்!! போலீஸ் ஷாக்

சென்னையில் காரில் சென்ற இளம்பெண் கூச்சலிட்டதால் காரை மடக்கிப் பிடித்த போலீசார் காரில் இளம் பெண்ணுடன் பயணித்த 3 இளைஞர்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் அதிகாலை 3 மணியளவில் அதிவேகமாகச் சென்ற காரில் இருந்து பெண்ணின் கூச்சல் சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது. அந்த சாலையில் இலங்கை தூதரகம் அமைந்திருப்பதால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த, தேவசகாயம் என்ற காவலர் அந்த காரை மடக்கி நிறுத்தியுள்ளார். காரை சோதனை செய்தபோது, காரில் இருந்த இளம் பெண் ஒருவர் கூச்சலிட்டுக் கொண்டே தனது செருப்பை எடுத்து உடனிருந்த இளைஞர்களை ஆவேசமாக அடித்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து காவலர் தேவசகாயம் இச்சம்பவம் தொடர்பாக உடனடியாக நுங்கம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த நுங்கம்பாக்கம் போலீசார், காரில் இளம் பெண்ணுடன் வந்த இளைஞர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் காரில் வந்த 23 வயதான இளம் பெண், போரூரில் தங்கி பணி புரிந்து வருவதும், நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நேற்றிரவு நடந்த கேளிக்கை நிகழ்ச்சியில்  கலந்து கொண்டதும் தெரியவந்தது. 

அப்போது விடுதியில் அறிமுகமான கௌதம், தீபக், சக்தி ஆகிய மூவரும் இளம் பெண்ணுக்கு பழக்கமாகி நட்பாகப் பேசியுள்ளனர்.  அனைவரும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதிகாலை 3 மணியளவில் இளம் பெண் தங்கியிருக்கும் அறையில் கொண்டு சென்று விடுவதாக 3 இளைஞர்களும் கூறியதை நம்பி இளம் பெண் அவர்களுடன் காரில் சென்றுள்ளார்.

அப்போது அந்த இளம் பெண்ணிடம் காரில் வைத்து தீபக், சக்தி, கவுதம் ஆகிய 3 இளைஞர்களும் பாலியல் சீண்டலில் ஈடுபட அவர் கூச்சலிட்டதாகவும், சத்தம் கேட்டு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் தேவசகாயம் அவர்களை மடக்கி பிடித்ததால் எந்தவித விபரீதமும் நடக்காமல் இளம் பெண் காப்பாற்றப்பட்டதாகவும் காவல் துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நடந்ததைப் புகாராகப் பெற்ற நுங்கம்பாக்கம் போலீசார் அவரை பாதுகாப்பாக அனுப்பி வைத்ததுடன், இவ்வழக்கை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றியுள்ளனர். இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தீபக், சக்தி, கவுதம் ஆகிய மூன்று இளைஞர்களிடமும் ஆயிரம் விளக்கு மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் மூன்று இளைஞர்களும் வேலூரைச் சேர்ந்தவர்கள் எனவும், துரைப்பாக்கத்தில் தங்கி தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணி புரிந்து வருவதும் தெரியவந்துள்ளது. அதனையடுத்து அவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com