கோவை சின்னியம்பாளையம் அருகே கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி கார் ஒன்றில் பெண் சடலம் சிக்கி இழுத்து வரப்படும் சிசிடிவி காட்சிகளை கொண்டு பீளமேடு போலீசார் 2 தனிப்படை அமைத்து உயிரிழந்த பெண்ணின் விவரங்கள் மற்றும் அவரது மரணத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விவகாரத்தில் திருவள்ளூர் பதிவு எண் கொண்ட கார் சம்பந்தப்பட்டிருப்பதாக சந்தேகித்த தனிப்படை போலீசார், திருவள்ளூர் போலீசாரின் உதவியை நாடினர். திருவள்ளுரை சேர்ந்த கார் விபத்தை ஏற்ப்படுத்தவில்லை உறுதி செய்த தனிப்படை போலீசார், கோவையில் காணாமல் போனோர் பட்டியலை கொண்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும் கார் பழுது நீக்கும் மெக்கானிக் செட்டுகளிலும் விபத்தை ஏற்படுத்திய காரை தேடிவந்தனர்.
இந்த நிலையில் சூலூர் அடுத்த பட்டணம் பகுதியில் இருந்த மெக்கானிக் ஷெட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இனோவா கார் ஒன்றின் சக்கரத்தில் பெண்ணின் சடலத்தில் இருந்த சேலை போன்ற துணி சிக்கி இருந்ததால், காரின் ஓட்டுனரான காளப்பட்டி நேரு நகர் பகுதியைச் சேர்ந்த பைசூல் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் ஓட்டுனர் பைசல் சாலையை கடக்க முயன்ற பெண்ணின் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து காரை பறிமுதல் செய்த போலீசார் நேற்றிரவு ஓட்டுனர் பைசலையும் கைது செய்தனர். காலை 11 மணிக்கு டிராபிக் விங் போலீஸாரிடம் பீளமேடு போலிஸார் ஃபைசலை ஒப்படைக்க உள்ளனர்.