திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறைவாசிகள் 20 பேருக்கு உணவு போதவில்லை என கேட்டதற்காக சிறைச்சாலை நுண்ணறிவு பிரிவான ஓசி டீம் தாக்கப்பட்டதில் ஒருவர் கவலைக்கிடமாக உள்ளார்.
நகை மாவட்டம், வேளாங்கண்ணி பகுதியை சேர்ந்த ரோசரி கிரேட்டன் என்ற இளைஞர் ஒருவர் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மதிய உணவிற்காக போதிய உணவை வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் 20 பேருக்கு உணவு கிடைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சிறைவாசிகளுக்கு போதிய உணவு வழங்ககோரி ரோசரி கிரேட்டன் சிறை நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளார். இந்நிலையில் இதனையறிந்த சிறைச்சாலை நுண்ணறிவு பிரிவான ஓசி டீமை சேர்ந்தவர்கள் மற்றவர்களுக்கு சாப்பாடு கேட்டு புரட்சி செய்கிறாயா? எனக் கூறி கடுமையாக தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதுபற்றி வெறியில் தெரியாமல் இருப்பதற்காக பனிஷ்மென்ட் சிறையில் தனியாக அடைத்து வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஓசி டீமை சேர்ந்தவர்கள் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கியதில் கழுத்துப் பகுதி, கை முகம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மூன்று நாட்களுக்கு மேலாக அவருக்கு உணவும் வழங்கப்படாததால் சிறைவாசி ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் ரோசரி கிரேட்டனை அவரது தந்தை கணேசன் மனு போட்டு பார்க்க சென்ற நிலையில் அவரை பார்க்க சிறை நிர்வாகத்தினரால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதுத் தொடர்பாக அவரது தந்தை கணேசன் கூறுகையில், "எனது மகனுக்கு உணவு கொடுக்காமல் இருட்டு அறையில் அடைத்து வைத்துள்ளனர். அவர் எங்களைப் பார்க்க அனுமதிக்கவில்லை. உடனடியாக அவருக்கு வெளி மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும். அவர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அரசு உடனடியாக தலையிட்டு அவரை காப்பாற்ற வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் சிறைவாசியின் வழக்குரைஞர் கீர்த்திகா கூறுகையில், "திருச்சி மத்திய சிறை நிர்வாகத்தில் செயல்படும் OC டீம் பிரிவு என்பது, சிறைத்துறை நிர்வாகத்தை மீறி தன்னிச்சையாக இதுபோன்று காட்டுமிராண்டித்தனமாக செயல்படுகிறது. காயம் அடைந்த ரோசரிகிரேட்டன் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறார். உடனடியாக சிறைதுறை நிர்வாகம் நடவடிக்கை எடுத்து அவருக்கு மேல் சிகிச்சை அளித்தால் மட்டுமே அவர் உயிர் பிழைப்பார்" என்று கூறியுள்ளார்.
மத்திய சிறைகளில் இருக்கும் சிறைவாசிகள் குற்றங்களில் ஈடுபடுவதை தடுக்கவும் போதைப்பொருட்கள் மறைத்து வருவதை தடுப்பதற்கும் OC டீம் பிரிவு எனும் சிறை நுண்ணறிவு பிரிவு செயல்பட்டு வருகிறது. ஆனால் இந்த OC டீம் தான்தோன்றித்தனமாக சிறைக்குள் ரவுடியிசம் செய்வதும், சிறைவாசிகளின் அடிப்படை மனித உரிமைகளை குறித்து கேள்வி எழுப்பினால் கூட அவர்களை காட்டுத்தனமாக தாக்குவதுமான செயல்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் சிறையில் சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் உணவு பொருட்கள் வாங்குவதில் கையாடல் நடப்பதாகவும் இதனை மறைக்கவே அதனை எதிர்த்து கேள்வி கேட்பவர்களை இவ்வாறு தாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: உலகின் மிக பெரிய இந்து கோயில் அக்டோபரில் திறப்பு..!