ரயில் பாதையில் டயர் கிடந்த விவகாரம்: குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் திணரும் போலீஸ்!

ரயில் பாதையில் டயர் கிடந்த விவகாரம்: குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் திணரும் போலீஸ்!

வாளாடி அருகே ரயில்வே பாதையில் கடந்த 2ம் தேதி டயர் வைக்கப்பட்ட விவகாரத்தில், இதுவரை 5 தனிப்படை அமைத்து  குற்றவாளிகளை பிடிக்க முயன்றதில் தொய்வு ஏற்பட்டதால் மேலும் ஒரு  தனிப்படையை அமைத்து மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரியில் இருந்து திருச்சி மார்க்கமாக கடந்த 2ஆம் தேதி சென்னைக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் சென்றபோது 2ம் தேதி நள்ளிரவு ஒரு மணி அளவில் திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட்டை அடுத்து பிச்சாண்டார் கோவில் - வாளாடி இடையே உள்ள ரயில் தண்டவாளத்தின் நடுவே படுக்க வாக்கில் ஒரு லாரி டயரும், நடுவே நின்றவாக்கில் ஒரு லாரி டயர் என என இரண்டு டயர்கள் இருந்துள்ளது. 

இதனைப் பார்த்த ரயில் ஓட்டுநர் சாமர்த்தியமாக செயல்பட்டு உடனடியாக ரயிலில் வேகத்தை குறைத்தார். ஆயினும் டயர் ரயில் இன்ஜினில் மாட்டியதால் மின் ஒயர் கேபிள் துண்டானது இதனால் நான்கு பெட்டிகளின் மின்விளக்குகள் மற்றும் விசிறிகள் இயங்கவில்லை. இதனை சரி செய்து 1.45 மணிக்கு அதாவது 40 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது.

இதுகுறித்து ரயில் இன்ஜின் ஓட்டுனர் கொடுத்த புகாரின் பேரில் விருத்தாச்சலம் இருப்பு பாதை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மணிவண்ணன் விசாரணை மேற்கொண்டு வந்தார். இச்சம்பவம் நடந்த இடத்தில் கடந்த மூன்றாம் தேதி திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார் நேரில் சென்று விசாரணை செய்தார். இந்த சதி செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிப்பதற்காக டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் இரண்டு தனிப்படைகளும், ரயில்வே போலீசார் சார்பில்  இரண்டு தனிப்படைகளும் ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் ஒரு தனிப்படை என மொத்தம் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை செய்து வந்தனர்.

இந்த தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி கடந்த 3ஆம் தேதி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மகன் உள்ளிட்ட அவரது நண்பர்கள் மூன்று பேரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்களுக்கு இச்சம்பவத்தில் தொடர்பு இல்லை என்று தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து இந்த டயர் யாருக்க சொந்தமானது? என விசாரணை செய்த போது ரயில் தண்டவாளம் அருகே வசிக்கும் கலையரசன் என்பவருக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. இதனையடுத்து கலையரசனை போலீசார் விசாரணை செய்தததில் கலையரசனுக்கும் இச்சம்பவத்திற்கும் தொடர்பு இல்லை என்றும் இவருடைய டயரை யாரோ மர்ம நபர்கள் திருடி உள்ளார்கள் என்பதும் தெரியவந்துள்ளது. 

இதனை அடுத்து நேற்று நான்காம் தேதி மாலை டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையிலான தனிப்படை போலீசார் செல்போன் டவரில் வரும் நம்பரின் சிக்னல்  வைத்து எட்டு பேரை சந்தேகத்தின் பேரில் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். பின்னர் அவர்களுக்கும் தொடர்பு இல்லை என வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் மூன்று நாட்கள் ஆகியும் லாரி டயரை வைத்த மர்ம நபர்களை கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலையில் தொய்வும் சிக்கலும் ஏற்பட்டதால், மத்திய ரிசர்வ் படை தலைமையில் மேலும் ஒரு தனிப்படை அமைத்து குற்றவாளி பிடிப்பதற்கு தேடி வருகின்றனர். ஒரு தனிப்படைக்கு ஒரு காவல் ஆய்வாளர் மூன்று உதவி காவல் ஆய்வாளர்கள் மற்றும் ஆறு காவலர்கள் என 10 பத்து பேர் கொண்ட குழுவாக ஆறு தனிப்படை அமைத்து 60 காவலர்களை கொண்டு குற்றவாளிகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை ஆறு தனிப்படை போலீசார்கள் மற்றும் மோப்ப நாய் லில்லி வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். லாரி டயரை மோப்பம் பிடித்த லில்லி சிறிது தூரம் ரயில்வே இருப்பு பாதையில் ஓடியது. மீண்டும் அருகில் உள்ள கோவிலில் போய் நின்றது. இதனால் குற்றவாளிகளை கண்டறிய இயலாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி உள்ள சமூக ஆர்வலர் கூறும் போது, "ரயில் விபத்து நடந்து மூன்று நாட்கள் ஆகியும் 5 தனிப்படைகள் அமைத்தும் குற்றவாளிகளை பிடிப்பதில் ஏன் இவ்வளவு தொய்வு ஏற்படுகிறது?  ஸ்காட்லாந்து போலீசுக்கு அடுத்தபடியாக தமிழக போலீஸ் உள்ளார்கள் என்று தெரிவிக்கிறார்கள் ஆனால் இதுவரை கண்டுபிடிக்க முடியாமல் இன்று ஆறாவதாக ஒரு தனிப்படை அமைத்துள்ளனர். இதனால் குற்றவாளிகளை பிடிப்பார்களா?" என்ற கேள்வி எழுந்துள்ளதாக கூறினார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com