புதுச்சேரியில் இருந்து வள்ளியூர் செல்லும் லாரி ஒன்று, நேற்று முந்தினம் நெல்லி நோக்கி வந்துகொண்டிருந்தது. அப்போது, நெல்லை கங்கைகொண்டான் சோதனை சாவடி அருகே வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து, லாரி மின்னல் வேகத்தில் சென்று, அங்கு வைக்கப்பட்டிருந்த சாலை தடுப்புகளில் மோத இருந்தது. அதனைத் தடுக்க, ஓட்டுனர் ப்ரேக்குகளைப் பயன்படுத்தியிருக்கிறார்.
கட்டுப்பட்டை இழந்த லாரி திடீரென சறுக்கி, தலைகீழாக கவிழ்ந்தது. அவருக்கு முன் சென்ற இருசக்கர வாகனத்தில் மோதி, அந்த நபர் லாரிக்கு அடியில் சிக்கி, உடல் நசுங்கி, பரிதாபமாக உயிரிழந்தார். இறந்தவர், தென்காசி மாவட்டம் ஊத்துமலை பகுதியை சேர்ந்த மதியழகன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரது மனைவி சாத்தூரில் ஆசிரியராக பணிபுரிகிறார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கங்கைகொண்டான் காவல்துறையினர் மதியழகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
லாரி ஓட்டுனர் வள்ளியூரை சேர்ந்த இம்மாணுவேல் என அடையாளம் காணப்பட்டுள்ளார். புதுச்சேரியில் இருந்து நெல்லை மாவட்டம் வள்ளியூருக்கு சவுக்கு கம்புகளை ஏற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஓட்டுனர் இம்மாணுவேலிடம் விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் கண்ணிமைக்கும் நேரத்தில் லாரி சறுக்கி கவிழ்வது போன்று காட்சிகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த காட்சி பார்ப்போரை பதை பதைக்க வைத்துள்ளது.