மர்ம நபர் கொடுத்த மாத்திரையால் உயிரிழந்த 2 பேர்... முன்பகை காரணமா? போலீசார் விசாரணை...

சென்னிமலையில் கொரோனா பரிசோதனை செய்வதாக கூறி மர்மநபர் வழங்கிய மருந்து சாப்பிட்ட பெண் மல்லிகா நேற்று பலியான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 பெண்கள் உயிரிழப்பு   மேலும் ஒருவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மர்ம நபர் கொடுத்த மாத்திரையால் உயிரிழந்த 2 பேர்... முன்பகை காரணமா? போலீசார் விசாரணை...
சென்னிமலை அருகே கொரோனா மாத்திரை என்று மா்ம நபா் கொடுத்ததை வாங்கி சாப்பிட்ட பெண் மல்லிகா நேற்று உயிரிழந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த வேலைக்காரி குப்பம்மாள் மற்றும் தீபா இன்று காலை சிகிச்சை பலனளிக்காமல் இறந்தனர்.  ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
 
ஈரோடு மாவட்டம், சென்னிமலையை அடுத்த கருங்கவுண்டன்வலசு அருகே உள்ள பெருமாள்மலை, சேனாங்காட்டு தோட்டத்தைச் சோ்ந்தவா் விவசாயி கருப்பண கவுண்டா் (75). அவருடைய மனைவி மல்லிகா (55). இவா்களும், இவரது மகள் தீபா (30), தோட்டத்தில் வேலை செய்து வந்த குப்பம்மாள் (65) ஆகிய நால்வரும் நேற்று வீட்டில் இருந்தனா். சுமாா் 25 வயதுடைய இளைஞா் ஒருவா் கொரோனா பரிசோதனை செய்வதாக இவா்கள் வீட்டுக்கு வந்து, நான்கு பேருக்கும் கருப்பு நிறத்தில் மாத்திரை கொடுத்துவிட்டு, ஏதோ ஒரு கருவி மூலம் பரிசோதனை செய்துள்ளாா். பின்னா், அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டாா்.
அதன் பிறகு சுமாா் அரை மணி நேரத்தில் மாத்திரை சாப்பிட்ட நான்கு பேருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடா்ந்து, அக்கம்பக்கத்தினா் நான்கு பேரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். செல்லும் வழியிலேயே மல்லிகா உயிரிழந்தாா். குப்பம்மாள், சேலம் அரசு மருத்துவமனையிலும், கருப்பண கவுண்டா், தீபா ஆகிய இருவரும் கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனா்.
 
இதுகுறித்து, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சசிமோகன், பெருந்துறை காவல் துணைக் கண்காணிப்பாளா் செல்வராஜ், சென்னிமலை காவல் ஆய்வாளா் சரவணன் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் முன்விரோதமாக நடைபெற்றதா அல்லது வேறு எதாவது காரணமா என்ற கோணத்தில் சென்னிமலை காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பக்கத்து ஊர்க்காரர்  கல்யாணசுந்தரம் விவசாயி கருப்பண்ணனிடம் ரூ.6 லட்சம் கடன் வாங்கியதாகவும், அதை கருப்பண்ணன் திருப்பி கேட்டதால் கல்யாணசுந்தரம், கல்லுரி மாணவர் சபரிஸ் (எ) போத்திஸ்குமார் மூலம் இந்த சம்பவத்தை அரங்கேற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த இருவரை பிடித்து காவல்துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்.