வேங்கை வயல் விவகாரம் "பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர்களை குற்றவாளிகளாக்க முயன்று வருகிறார் சிபிசிஐடி டிஎஸ்பி" !

வேங்கை வயல் விவகாரம் "பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர்களை குற்றவாளிகளாக்க முயன்று வருகிறார் சிபிசிஐடி டிஎஸ்பி" !

வேங்கை வயல் விவகாரத்தில் "சிபிசிஐடி துணைக்கண்காணிப்பாளர் பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர்களை குற்றவாளிகளாக்க முயன்று வருகிறார் " என DNA பரிசோதனைக்க அழைக்கப்பட்டோர் தரப்பிலிருந்து மதுரை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித கழிவுகளை கலந்த விவகாரம் பூதாகரமாக உருவெடுத்ததையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி துணைக்கண்காணிப்பாளர் பட்டியலின மக்களையே குற்றவாளியாக்க முயன்று வருவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஒரு மனுவில் இது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

வேங்கை வயல் கிராமத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், " கடந்த ஆண்டு டிசம்பரில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவுகள் கலந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு விதமான தீண்டாமைகள் நடைபெற்று வரும் சூழலில், இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி துணை காவல் ஆய்வாளர், தவறு செய்தவர்களை கண்டறியும் முயற்சியில் ஈடுபடாமல், தொடர்ச்சியாக பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர்களை குற்றவாளிகளாக்க முயன்று வருகிறார்.  

என்னையும், இதில் எவ்விதத்திலும்  தொடர்பு இல்லாத சுபா என்பவரையும் டிஎன்ஏ பரிசோதனைக்கு வருமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமானது. ஆனால் சிபிசிஐடி துணை காவல் கண்காணிப்பாளர் என் மீது குற்றம் சுமத்தும் நோக்கில் தொடர்ச்சியாக தொல்லை செய்து, மிரட்டி வருகிறார்.  

எங்களிடம் DNA மாதிரிகள் சேகரிக்கப்பட்டது, DNA பரிசோதனை செய்வது போன்றவை வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறவில்லை. ஆகவே DNA பரிசோதனை செய்வது தொடர்பாக புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதோடு, என்னை DNA பரிசோதனைக்கு வருமாறு கட்டாயப்படுத்தக்கூடாது என உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளங்கோவன் பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கின் விசாரணை அதிகாரி  வேங்கை வயல் விவகாரத்தில் DNA பரிசோதனைக்கு மேற்கொள்ள வேண்டும் எனில் யார், யாருக்கு DNA சோதனை மேற்கோள்ள உள்ளனர் என்பது குறித்து, விசாரணை நடைபெறும் நீதிமன்றத்தில் மனு அளிக்க வேண்டும். அதன் பிறகு, நீதிபதி DNA சோதனை நடத்த உள்ளவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர்களின் விளக்கத்தை கேட்டு,  இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிக்க:தேர்தல் வழக்கில் ஓ.பி.ரவீந்திரநாத் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு!