துப்பாக்கி பயிற்சி விவகாரம்...! ரவுடி வெள்ளை சுந்தர் கைது...!!

துப்பாக்கி பயிற்சி விவகாரம்...! ரவுடி வெள்ளை சுந்தர் கைது...!!
Published on
Updated on
2 min read

துப்பாக்கி பயிற்சி அளித்த விவகாரத்தில் கடந்த ஒரு மாதமாக தலைமறைவாக இருந்த ரவுடி வெள்ளை சுந்தர், டெல்லியில் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்

நெல்லையை சேர்ந்த ரவுடி வெள்ளை சுந்தர் தனது உறவுக்கார இளைஞர் கோபி என்பவருக்கு துப்பாக்கி பயிற்சி அளிப்பது போல வீடியோ சமீபத்தில் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் சமூக வலைதளங்களில் வைரலானது. 

இதையடுத்து நெல்லை மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து துப்பாக்கி பயிற்சி வீடியோ வெளியான  விவகாரம் தொடர்பாக ரவுடி வெள்ளை சுந்தர் மற்றும் அவரது உறவினர் கோபி ஆகிய இருவரையும் தேடி வந்தனர். இதற்கிடையே கோபியை பாளையங்கோட்டை போலீசார் கைது செய்தனர். சமீபத்தில் வெள்ளை சுந்தர் நெல்லை கோர்ட்டில் ஆஜராக வந்த போது அவரை காவல்துறையினர் தப்பவிட்டதாக கூறப்படுகிறது. 

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகள் மீது மாநகர காவல் ஆணையர் துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொண்டார். இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக போலீசாருக்கு தண்ணி காட்டி வந்த ரவுடி வெள்ளை சுந்தர் டெல்லியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து நெல்லை மாநகர காவல் துறை ஆணையர் சரவணகுமார்  மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் திருப்பதி தலைமையிலான தனிப்படை டெல்லி விரைந்தது.

இந்த நிலையில் இன்று அதிகாலை தனிப்படை போலீசாரால் வெள்ளை சுந்தர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் நெல்லை அழைத்து வரப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வெள்ளை சுந்தரிடம் ஒரு துப்பாக்கி மட்டுமே இருந்ததா அல்லது மேலும் துப்பாக்கிகள் வைத்திருந்தாரா இவரது கூட்டாளிகள் யார் யார் என காவல்துறையினர் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com