அம்மிக் கல்லை தூக்கி போட்டு பெண் படுகொலை; சம்பவ இடத்தில் ஓமலூர் டிஎஸ்பி விசாரணை:

ஓமலூர் அருகே தடவழி பிரச்சனையில் அம்மி கல்லை தூக்கி போட்டு பெண் படுகொலை. தப்பி ஓடிய கொலையாளியை தீவட்டிப்பட்டி போலீசார் தேடி வருகின்றனர்.
அம்மிக் கல்லை தூக்கி போட்டு பெண் படுகொலை; சம்பவ இடத்தில் ஓமலூர் டிஎஸ்பி விசாரணை:
Published on
Updated on
2 min read

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த காடையாம்பட்டி தாலுக்கா தும்பிப்பாடி கிராமம் ரெட்டியூர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன். இவரது மனைவி பழனியம்மாள் (52), இவர்களுக்கு கந்தசாமி சண்முகம் கார்த்திக் என்ற மூன்று மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் மூன்று குழந்தைகளும் சிறு வயது இருக்கும் பொழுதே சாமிநாதன் சுமார் 30 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.

அந்த சூழ்நிலையில் பழனியம்மாள் தனது வீட்டிலேயே காய்கறி வியாபாரம் மற்றும் ஆடுகள் மேய்க்கும் கூலி வேலைகள் செய்தும் தனது மூன்று குழந்தைகளையும் காப்பாற்றி வந்துள்ளார். தனது மூன்று மகன்களையும் ஆளாக்கிய பழனியம்மாள் இரண்டு மகன்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார் இன்னும் கடைசி மகன் கார்த்திக் மட்டும் திருமணம் ஆகாமல் உள்ளார்.

மூன்று மகன்களுமே வெளியில் தங்கி டிரைவர் வேலை செய்து வருகின்றனர் கடைசி மகன் கார்த்திக் மட்டும் அவ்வப்போது அம்மாவை வந்து பார்த்துவிட்டு வேலைக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் பழனியம்மாளின் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் சேர்வராயன் என்பவரது மகன் மாது (37) இவர் பெயிண்ட் அடிக்கும் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

இவருக்கும் பக்கத்து வீடுகாரர்களான பழனியம்மாள் குடும்பத்தார் ஆகிய இருவருக்கும் தடவழிப் பிரச்சனையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து நேற்று இரவு குடிபோதையில் வந்த மாது பக்கத்து வீட்டைச் சேர்ந்த பழனியம்மாளிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது மாது பழனியம்மாளின் மாமியாரை கீழே தள்ளி விட்டு அருகில் இருந்த அம்மிக்கல்லை தூக்கி பழனியம்மாள் மீது தாக்கி உள்ளார்.  இதில் பலத்த காயமடைந்த பழனியம்மாளை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை  பலனளிக்காமல் பழனியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து ஓமலூர் டிஎஸ்பி சங்கீதா மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பற்றி தீவட்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய கொலை குற்றவாளியான மாதுவை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில் மாது அடிக்கடி குடித்துவிட்டு ஊரில் உள்ள பல பேரிடம் தொடர்ந்து இது போன்ற பிரச்சனைகள் செய்து வருவதாகவும்,  இவனை கைது செய்து சிறையில் நிரந்தரமாக அடைத்தால் தான் இப்பகுதியில் மக்கள் நிம்மதியாக வாழ முடியும் என்றும் தெரிவித்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com