முதியோர் உதவித்தொகை வாங்கித்தருவதாக கூறி, மூதாட்டியிடம் நகை பறிப்பு!

மதுரை மாவட்டம் மேலூரில் முதியோர் உதவி தொகை பெற்று தருவதாக மூதாட்டியை ஏமாற்றிய இளைஞரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் மேலூர் நகர் காத்தாபிள்ளை தெரு கணக்குப் பிள்ளை காம்பவுண்ட்டை சேர்ந்த நாகரத்தினம் மனைவி வசந்தா(65). மூதாட்டியான இவரை, செல் போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் முதியோர் உதவித் தொகை வாங்கி தருவதா கூறி மேலூர் தாலுகா அலுவலகத்திற்கு வருமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதனை நம்பிய மூதாட்டி வசந்தா, மேலூர் தாலுகா அலுவலகப் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது அவரை டிசர்ட் ,சீன்ஸ் பேண்ட் அணிந்திருந்த டிப்டாப் இளைஞர் ஒருவர் நான் தான் போன் செய்ததாக கூறி மூதாட்டியை அழைத்து அங்குள்ள ஒரு கேண்டினில் காபி வாங்கி கொடுத்துள்ளார். 
 
பின்னர் அங்கிருந்த ஈ சேவை மையப்பகுதிக்கு அழைத்து சென்றவர், போட்டோ எடுக்க வேண்டும் என கூறி, காதில் தங்கப் பொருட்கள் போட்டிருந்தால், முதியோர் உதவித் தொகை கிடைக்காது என தெரிவித்துள்ளார். அதை நம்பிய வசந்தாஅவரது காதில் போட்டிருந்த ஒரு சவரன் எடையுள்ள தங்க தோடு மற்றும் அதற்குரிய மாட்டல் உள்ளிட்டவைகளை கழற்றி கொடுத்துள்ளார்.

இங்கேயே இருங்கள் இதோ கேட்டு விட்டு வருகிறேன் என நகையுடன் சென்றவர் வெகு நேரமாகியும் திரும்பி வர வில்லை. அதன் பின்னர், தான் ஏமாற்றப்பட்டதை தெரிந்து கொண்ட மூதாட்டி மேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

அப்போது அவர் தம்மிடம் போனில் பேசிய அந்த போன் நம்பரையும் கொடுத்தார். இந்த மோசடி குறித்து வழக்கு பதிவு செய்த மேலூர் போலீசார், கேன்டீனில் காபி வாங்கி கொடுத்த போது அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டும், போன் நம்பர் விலாசத்தை கொண்டும் மர்ம நபரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

முதியோர் உதவித் தொகை பெற்று தருவதாக ஆசை வார்த்தை கூறி மூதாட்டியிடம் நகையை திருடி சென்ற சம்பவம் மேலூரில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com