ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே யூடியூப் வீடியோ பார்த்து நகைக்கடையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கடைவீதி பகுதியில் பத்ரிநாதன் என்பவருக்கு சொந்தமான கன்னிகா ஜுவல்லரி என்ற நகை கடை உள்ளது. நேற்று அதிகாலை மர்ம நபர் ஒருவர் இக்கடையின் பக்கவாட்டு சுவரை இடித்து நகைகளை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார்.
இடிக்கும் சத்தத்தைக் கேட்டு அருகே வசிக்கும் மக்கள் எழுந்து வந்து பார்த்த போது அந்த மர்ம நபர் தப்பி ஓடியுள்ளார். இதுகுறித்து கடை உரிமையாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சத்தியமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர்.
இந்நிலையில் இன்று கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட கரூர் மாவட்டம், கட்டளை கிருஷ்ணராயபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜபாண்டி என்ற இளைஞரை புளியம்பட்டி அருகே சத்தியமங்கலம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இவர் தனியார் நூற்பாலையில் வேலை செய்து வருவதாகவும் யூடியூப் வீடியோவை பார்த்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்து சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர்.